ஆன்மிகம்
தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா எழுந்தருளியதையும் காணலாம்.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர், உத்தமர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-11-16 06:51 GMT   |   Update On 2020-11-16 06:51 GMT
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருப்பட்டூர் மற்றும் அன்பில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்கள், உத்தமர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேற்று இரவு 9.36 மணிக்கு இடம் பெயர்ந்தார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் பலவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்படி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரம்மா, தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குருபெயர்ச்சி நடைபெற்ற நேரமான இரவு 9.36 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இங்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

லால்குடி அடுத்த அன்பில் சவுந்தரநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கடம் பூஜை, சங்கல்பம் ஹோமம் நடைபெற்றது. பின்னர் தட்சிணாமூர்த்திக்கு மகா தீபாராதனை அபிஷேகங்கள் நடைபெற்றன. லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில், பூவாளூர் திருமூலநாதர் கோவில், மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு குருப்பெயர்ச்சி விழாவில் குருபகவான் அருள் பெற்று சென்றனர்.

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார ஹோமம் நடைப்பெற்றது. முன்னதாக உற்சவர்கள் பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் கோவில் உள்ள ராமர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்ணியாகாவஜனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து குருப்பெயர்ச்சியை பரிகார சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து உற்சவ மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்த உத்தரவின்படி ஹோம நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் நேரில் கலந்துகொண்டு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தடைசெய்யப்பட்டது. அதன்படி இரவு 7மணி முதல் கோவில் கதவுகள் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் ஹோம நிகழ்வின்போது பக்தர்கள் கோவில் வெளிப்பகுதியில் நின்று பிரார்த்தனை செய்து சென்றனர்.

துறையூரில் உள்ள கோலோச்சும் முருகன் கோவிலில் சிறப்பு யாகமும், தட்சிணாமூர்த்திக்கும், துறையூரை அடுத்து உள்ள கோட்டாத்தூர் பசுபதீசுவரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன. பரிகார ஸ்தலமாக விளங்கும் நீலிவனேஸ்வரர் கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள காரணத்தாலும், அதிகார வல்லவர் என்பதாலும் இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவில்லை.

இதுபோல் குருபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி அளவில் திருச்சி கருமண்டபம் ஜெய்நகர், வசந்த் நகரில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜை, மற்றும் ஆராதனை குரு பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தெப்பக்குளம் அருகே உள்ள நாகநாதர் கோவிலில் குரு பெயர்ச்சிக்கான யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Tags:    

Similar News