செய்திகள்
பிரித்வி ஷா

தடுப்பூசி போடச்சென்ற பிரித்வி ஷா தடுத்து நிறுத்தப்பட்டார்

Published On 2021-05-14 10:05 GMT   |   Update On 2021-05-14 10:05 GMT
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான பிரித்வி ஷா கோவாவில் தடுப்பூசி போடச் சென்றபோது, அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்தது.

இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்திய வீரரும், ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா, தனது நண்பருடன் கோவா சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவு செய்தார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும்போது, எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவா மாநிலத்திற்குள் வேறு மாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு இ-பாஸ் தேவை என்பதை வலிறுத்தி அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் செல்போன் மூலம் இ-பாஸ் பதிவு செய்து அனுமதி கிடைத்தபின், சுமார் ஒருமணி நேரம் கழித்து சென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், உடல் பருமன் காரணமாக சேர்க்கப்படவில்லை. விக்கெட்டிற்கு இடையில் மெதுவாக ஓடுவதாலும், பீல்டிங்கில் குறைபாடு இருப்பதாலும் உடலை எடையை குறைக்க பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

ரிஷப் பண்டிற்கும் இதே நிலை ஏற்பட்டது. அதன்பின் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News