செய்திகள்
நீர்மட்டம் உயர்ந்ததால் கடல்போல் காட்சியளிக்கும் அமராவதி அணை.

தொடர் மழையால்அமராவதி அணை நீர்மட்டம் 80அடியாக உயர்வு

Published On 2021-07-22 14:16 GMT   |   Update On 2021-07-22 14:16 GMT
கல்லாபுரம், ராமகுளம் பழைய கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
உடுமலை:  

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் வரை 2 மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது

பாசனத்திற்கு நீர்திறப்பு இந்நிலையில் இந்த  ஆண்டு விவசாயிகளின்
கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் போதுமான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 21-ந்தேதி குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மே 16-ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களை காப்பாற்றவும், கரூர் வரையில் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஜூன் 18-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கல்லாபுரம், ராமகுளம் பழைய கால்வாய் பாசனப்பகுதி களுக்கு குறுவை நெல் சாகுபடிக்காக கடந்த சில நாள்களுக்கு முன்புஅணையில்  இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 65 அடியாக சரிந்தது.இதற்கிடையே  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேனாறு, சின்னாறு, பாம்பாறு ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. 90 அடி உயரமுள்ள அணையில் தற்போது நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News