செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2021-05-29 12:56 GMT   |   Update On 2021-05-29 13:54 GMT
கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
புதுடெல்லி:

நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் நிதியுதவி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. அவ்வகையில் மத்திய அரசும், அத்தகைய குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தின்கீழ் இந்த உதவி வழங்கப்படும். 

கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும். 18 வயதுக்கு பிறகு மாத ஊக்கத்தொகையானது அந்த வைப்பு நிதியில் இருந்து வழங்கப்படும். வைப்பு தொகையை 23வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். 



குழந்தைகளுக்கு கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கப்படும். தனியார் பள்ளியில் படித்தால் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப பிஎம் கேர் நிதியில் இருந்து கல்விக் கட்டணம் வழங்கப்படும். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும். 

உயர்கல்விக்காக வங்கிகளில் கடன் பெற்றால் அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து செலுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். காப்பீடு பிரிமியம் தொகையை 18 வயது வரை பிஎம் கேர்ஸ் செலுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News