ஆன்மிகம்
குல தெய்வ விரத வழிபாடு

குடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு

Published On 2019-10-10 09:02 GMT   |   Update On 2019-10-10 09:02 GMT
குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், எளிதில் தீர வழிபிறக்கும்.
‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது சான்றோர் வாக்கு. எனவே நமக்கெல்லாம் முதன் முதல் தெய்வம் பெற்றோர்கள். அடுத்ததாக மூல முதற் கடவுள் விநாயகப் பெருமான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் என்று இருக்கும். அந்தக் குலதெய்வத்தைக் கண்டறிந்து வழிபட்டால் வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், எளிதில் தீர வழிபிறக்கும். குலதெய்வ வழிபாட்டிற்குப் பிறகு இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மை தரும்.

இக்காலத்தில் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் விரும்புவதில்லை. ‘அவர் இப்படிப் பொன்கொழிக்க வாழ்கின்றாரே? வீடு வாகனம் வைத்துள்ளாரே?’ என்று பொறாமைப்படுவார்கள். அந்தப் பொறாமையால் தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அவை ஏற்படாமல் இருக்க நாம் முறையாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருடைய குலதெய்வ வழிபாடும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஒரு சிலர் சிவராத்திரி அன்று வழிபடுவர், இன்னும் சிலர் அமாவாசை அன்று வழிபடுவர், மேலும் சிலர் ஆடி மாதத்தில் வழிபடுவர், ஒரு சிலர் வெள்ளிக்கிழமையன்று வழிபடுவர், நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை நம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப வழிபட்டால் ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.

பார்வை பலம் என்பது கிரகங் களுக்கு மட்டுமல்ல, மனிதர் களின் பார்வையிலும் பலம் இருக்கிறது. அது அதிகமாவதைத் தான் ‘கண் திருஷ்டி’ என்று சொல்கிறோம். ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பது முன்னோர் வாக்கு. சிலரது பார்வைகள் பட்டாலே உடனடியாக அதன் பலன் தெரியும். பொதுவாகவே குழந்தைகள் அழகாக இருந்தால் பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தைகளின் மீது பதியும் சிலரது பார்வையின் பலத்தால் அந்தக் குழந்தைகள் இரவில் அழத் தொடங்கும். சாப்பாட்டைக் கூடத் தவிர்த்து விடும். எனவேதான் அழகான குழந்தைகளுக்கு அலங்காரம் செய்பவர்கள், குழந்தையின் கன்னத்தில் பொட்டு வைத்துவிடுவர். அதுவும் கருப்பு பொட்டு வைப்பதுதான் முக்கியத்துவம். அதன் மூலம் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது நம்பிக்கை.

சிலருடைய பார்வையின் வலிமையில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பது வழிபாடாகும். அதில் குலதெய்வ வழிபாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இல்லத்தில் எந்தவொரு சுபகாரியம் நடைபெற்றாலும், அதில் பலபேர் வந்து கலந்து கொள்வது வழக்கம். எல்லோருடைய பார்வை பலமும் நம்மீது பதிவதால்தான் விழா முடிந்தபிறகு குடும்பத்துடன் திருஷ்டி சுற்றிக் கொள்ள வேண்டும் என்று குடும்பப் பெரியவர்கள் கூறுவர். அதை முறைப்படி கடைப்பிடித்தால் கண்திருஷ்டியில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க இயலும்.

ஒரு மனிதன் கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து யோகமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், தெய்வ வழிபாடுகள் மட்டுமின்றி, ஹோமங்களும் கைகொடுக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை முழுமையாக ஆராய்ந்து, அவர்களது ராசி, நட்சத்திர அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் வீட்டில் உள்ள மையமான இடத்தைத் தேர்ந்தெடுத்து எந்த அமைப்பில் ஹோமம் வைத்தால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்களை வீட்டில் வைக்கலாம். இல்லையென்றால் கோவிலில் யோகம் தரும் நாளைத் தேர்ந் தெடுத்து வைக்க வேண்டும். அத னால் நற்பலன்களை நாம் உடனடியாகப் பெற முடியும். தடைகள் அகலும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

ஹோமங்களிலே கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், வித்யார்த்த ஹோமம் என எத்தனையோ ஹோமங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்த ஹோமம் நமக்குப் பொருத்தமான ஹோமம் என்பதை ஆராய்ந்து வீட்டில் செய்வதா, கோவிலில் செய்வதா என்பதை முடிவு செய்து செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். இல்லையெனில் ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொண்டும் நற்பலன் பெறலாம். ஹோமங்களை வீட்டில் நடத்துபவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது நல்லது.

பொதுவாகவே நல்ல திறமை இருந்தும் முன்னேற்ற முடியவில்லையே என்று நினைப்பவர்கள், நாள் கடந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள், எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்கும் போதே தடை ஏற்படுகின்றதே என்று நினைப்பவர்கள், நல்ல நிலையில் இருந்து சாதாரண நிலையை அடைந்தவர்கள் ஆகியோர் சகல யோகங்களைப் பெறவும், சக்கரவர்த்தியைப் போல வாழவும், துர்க்கை, வராகி போன்ற தெய்வங்களை வழி படுவது சிறப்பானது. இந்த வழிபாடுகளோடு குலதெய்வ வழிபாட்டையும் மாதம் ஒருமுறை மேற்கொண்டால் நமது எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

தேகநலம் சீராக வேண்டுமானாலும், செல்வ வளம் பெருக வேண்டுமானாலும் தெய்வ வழிபாடுகள் கை கொடுக்கும். திருஷ்டி தோஷங்களைப் போக்கும் தெய்வ வழிபாடுகளை முறையாக அறிந்து செய்தால், வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கி வளர்ச்சி கூடும். எனவே மறவாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு சகல யோகங்களும் வந்து சேர வழியமைத்துக் கொள்ளுங்கள்.

எஸ்.அலமு ஸ்ரீனிவாஸ்
Tags:    

Similar News