லைஃப்ஸ்டைல்
முகம் மற்றும் சரும பராமரிப்பு

முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்

Published On 2020-11-23 03:19 GMT   |   Update On 2020-11-23 03:19 GMT
முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.
உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது. இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன. எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியம்.

முகப்பராமரிப்பு

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவருடைய முகம் தான் உலகத்தின் முக்கியமான அடையாளம். அதனால் முகத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகங்களில் அதிகமான பருக்கள், வியர்க்குரு வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் 3-4 முறை கழுவ வேண்டும்.

சருமபராமரிப்பு

முகபராமரிப்பும், சரும பராமரிப்பும் மிக முக்கியம். ஏனெனில் தோலின் இயற்கைநிலை வேறுபடுவதால் தோலில் அரிப்பு, படை, தேமல் உண்டாகிறது. தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இப்போது மக்கள் வாசனையுள்ள சவுக்கார கட்டிகளை உபயோகின்றார்கள். அவைகளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் மேனி கெட்டுவிடுகிறது. உப்புச்சத்து அதிகம் உள்ள நீரில் குளிப்பதால் எண்ணெய் சிக்கு நீங்காது. இவைகளை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி பண்டைய காலங்களில் பாரம்பரியமாக உபயோகித்து வந்த குளியல் பொடிகளை உபயோகிப்பது நன்று.
நம் பதினெட்டு சித்தர்கள் கூறியுள்ள குளியல் பொடி ‘நலுங்குமா’ உபயோகிப்பதனால் சருமபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

நலுங்குமா என்றால் என்ன?

பாசிபயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சுவேர், கிச்சலிக்கிழங்கு. இவைகளை சரிபங்கு அரைத்து பொடியாக வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து குளிக்க உபயோகிக்கலாம். இதனால் வியர்க்குரு, நமைச்சல், படை, கரப்பான், சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகள்

முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்:-

ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.

உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் (அ) பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.

தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.

ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.

10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.

வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.

கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.

மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.

ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.

தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.
Tags:    

Similar News