செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

கொரோனா மருந்து, மருத்துவ பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு -மத்திய நிதி மந்திரி அறிவிப்பு

Published On 2021-06-12 10:38 GMT   |   Update On 2021-06-12 10:38 GMT
கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு மற்றும் வரிச்சலுகை அளிப்பது தொடர்பாக, மாநில நிதி மந்திரிகள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எந்தெந்த நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று நிதி மந்திரி 
நிர்மலா சீதாராமன்
  அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

அமைச்சர்கள் குழு வழங்கிய அனைத்து பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர் மாஸ்க் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்படும். கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு வரி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. டோசிலிசுமாப் மருந்துக்கும் வரி இல்லை.

கொரோனா சோதனை கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர், சானிடைசர், வெப்ப சோதனை கருவி ஆகியவற்றின் வரியும் குறைக்கப்படுகிறது. இந்த வரிகுறைப்பு மற்றும் மாற்றம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News