ஆன்மிகம்
தசரா திருவிழா

தசரா திருவிழா: மாறு வேடங்களில் உலா வரும் பக்தர்கள்

Published On 2019-10-02 05:13 GMT   |   Update On 2019-10-02 05:13 GMT
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விதம் விதமாக வேடம் அணிந்து வந்து முத்தாரம்மனை வழிபட்டுச் செல்வார்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சக்தி வழிபாடு ஒவ்வொரு விதமாக உள்ளது. அந்த வழிபாடுகளில் மண்வாசனை வீசும். சில பகுதிகளில் வித்தியாசமான வழிபாடுகள் நடைபெறும். அதில் தனித்துவம் கொண்டதாக குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உள்ளது.

இந்த விழாவில் பக்தர்கள் விதம் விதமாக வேடம் அணிந்து வந்து முத்தாரம்மனை வழிபட்டுச் செல்வார்கள். ஆதிகாலத்தில் குலசை முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம்.

இந்த ஐதீகப்படி முத்தாரம்மனுக்கு வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தாங்களும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் தர்மம் பெற்று வழிபடுகிறார்கள். மாறுவேடம் போடும் பக்தர்கள் பொதுவாக காளி வேடம், பெண் வேடம், குறவன்,குறத்தி வேடம் மற்றும் கடவுள்கள் ஆகியவற்றையே போடுவது உண்டு. சமீபகாலமாக எல்லா வேடங்களையும் பக்தர்கள் போடுகிறார்கள். இது ஐதீக மீறல் என்றாலும் தெய்வீக குற்றமாக கருதப்படுவது இல்லை.

வேடம் போடும் பக்தர்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். பொதுவாக பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து அம்பாளின் அருள் வேண்டி ஏதேனும் ஒரு தவ வேடம் அணிந்து காட்சி தருகின்றனர். இதற்காக ஊர்தோறும் தசரா குழுக்கள் அமைப்பார்கள். பின்னர் மேளதாளம் முழங்க கரகாட்ட நடனக் குழுவினருடன் அணி அணியாக குலசைக்கு வருகின்றனர். பத்தாம் நாளன்று இரவில் அன்னையின் ஆலய வளாகத்தில் இவர்கள் அனைவரும் ஒருசேரக் கூடுகின்ற னர். 41 நாட்கள் கடும் விரதம் மேற்கொள்பவர்கள், காளிவேடம் அணிகின்றனர். ஆனால் இந்த வேடத்தை ஆண்கள் மட்டுமே அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் நாளன்று காவடி ஏந்தியவாறு திருவீதி வலம் வந்து கோவிலை சென்றடைந்த பின்னரே இவர்கள் காளி வேடம் தரிக்கினறனர்.

அந்த வேடமணிபவர்களிடம் காளி அருள் கிடைக்கும் என்பதால் இவர்களை பக்தர்கள் பலரும் வணங்கி அருள்வாக்குப் பெற்று செல்வதும் உண்டு.காளி வேடம் அணிபது மட்டுமல்லாமல் சிவன், விஷ்ணு, நாரதர் போன்ற கடவுள்களின் உருவத்தை போன்றும் தோற்றம் மாறி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
அத்துடன் பு-லி, கரடி, சிங்கம், குரங்கு போன்றும் இவர்கள் அலங்காரங்கள் செய்து கொள்வார்கள். நமது இந்து மதத்தில் வன விலங்குளிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்ற தத்துவம் கூறப்படுகிறது.அதன் காரணமாகவே வனவிலங்குளை நாம் வழிபட்டு வருகிறோம். இதனை உணர்த்தவே இதுபோன்று முகமூடி அணிந்து பக்தர்கள் காட்சியளிப்பது இங்கு நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் ராஜா, ராணி, போன்ற வேஷம்அணிவதோடு நரிக்குறவர், குறத்தி போன்று வேஷமிட்டு ஆலய வலம் வருவதும் உண்டு. நீதிபதி, போலீஸ் போன்ற தற்போதைய கலாச்சாரங்களை பிரதிபலிக்கிற விதமாகவும் பக்தர்கள் பலர் வேடமணிந்து வருவார்கள்.

நமது தமிழகத்தின் அழியாக் கலையான புலி வேஷம் இங்கு பிரதானமாக் காட்சி தருகிறது. புலி முகத்தைப் போன்ற முகமூடி அணிந்து உடல் முழுவதும் புலியைப் போன்றே வரிகள் வரைந்து வால் வைத்து கொண்டு பக்தர்கள் பலர் ஆடிப்பாடி வருவது வேடிக்கையாக இருக்கும்.

இப்படி பல்வேறு வேஷமணிந்து வருபவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களில் பலரும் நேர்த்திக் கடனுக்காக இதுபோன்று வேடம் போட்டு வருவது உண்டு. வேடமணிந்து வீடுவீடாக வரும் பக்தர்கள் காணிக்கை வசூலிப்பார்கள். பின்னர் அதனை முத்தாரம்மன் சன்னதியில் அமைந்திருக்கும் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்வார்கள்.

காப்புக்கட்டித்திருக்கோயில் பிரகாரத்தில் வேடம் எதுவும் அணியாமல் விரதம் மட்டும் இருப்போரும் உண்டு. 
Tags:    

Similar News