உள்ளூர் செய்திகள்
ஷவர்மா

கேரளாவில் சிறுமி பலி: கோவை ஓட்டல்களில் ‘சிக்கன் ஷவர்மா’ சோதனை- கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Published On 2022-05-06 11:59 GMT   |   Update On 2022-05-06 11:59 GMT
கோவையில் கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கோவை:

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் ஷவர்மா சாப்பிட்டதில் சிறுமி உயிரிழந்தார். பலர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த ஷவர்மாவை சோதனைக்கு உட்படுத்தினர். இதில் அது கெட்டுப்போன கோழி இறைச்சி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர பிற மாநிலங்களிலும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடக்கிறது.

இந்த நிலையில் கோவையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினர் 8 குழுவாக பிரிந்து கோவை வ.உ.சி. பூங்காவையொட்டி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அந்த கடைகளில் சிக்கன் ஷவர்மா தயாரிப்பதற்கு கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் கெட்டுப்போன சிக்கனை பறிமுதல் செய்தனர். மேலும் கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கடைகளில் இருந்து சிக்கன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்திய கடைகளும் நோட்டீசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஷவர்மா சாப்பிடுவது மிக மோசமான வயிற்று பிரச்சினையை ஏற்படுத்தும். ஷவர்மாவில் குபூஸ் எனப்படும் ரொட்டி தயாரிக்கும் மைதா பயன்படுத்துகின்றனர். மைதாவை தொடர்ந்து உட்கொண்டால் குடல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. குபூஸ் முழுமையாக சமைக்கப்படுவதில்லை.

அரை விநாடி மட்டுமே நெருப்பு அனலில் வாட்டுகின்றனர். முழுமையாக வேகாததால் உடல் நலத்தை பாதிக்கிறது. சில கடைகளில் முதல் நாள் விற்காத எஞ்சிய ஷவர்மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிக்கன் டிக்கா செய்து ஷவர்மாவுடன் விற்கின்றனர். அப்படி முதல் நாள் சமைத்த பிராய்லர் கோழிக்கறியை குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் மீண்டும் சமைத்தால் சில சமயங்களில் விஷமாக மாறி உயிரை குடிக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News