உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வறட்சி அபாயம் - நீர் நிலைகள் கண்காணிப்பு

Published On 2022-01-11 05:52 GMT   |   Update On 2022-01-11 05:52 GMT
கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே வறட்சியின் தாக்கம் அதிகரிக்கிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேசமயம் பல இடங்களில் தனியாருக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் எவ்வித அனுமதியின்றி லாரிகள், டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் எடுத்து செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:

விளைநிலங்கள் மட்டுமல்லாது காலி மனையிடங்களிலும் போர்வெல் அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. பின் லாரிகள், டிராக்டர்கள் வாயிலாக எடுத்துச்செல்லப்படும் தண்ணீர் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது.

பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகப்படியான தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒவ்வொரு வாகனங்களுக்கும் குறிப்பிட்ட லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகளும், கசிவுநீர் குட்டைகளும் அமைக்கப்படுகின்றன. இவற்றிற்கு போர்வெல் வாயிலாக தண்ணீர் எடுத்துச்செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கோடை காலம் துவங்கினால் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னதாகவே நீராதாரமிக்க பகுதிகளின் நிலையை கண்காணிக்கும் வனத்துறையினர், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

வழக்கமாக வறட்சி என்பது மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே வறட்சியின் தாக்கம் அதிகரிக்கிறது.

இதனால் தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகளுக்கு லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படும். அங்கு வனவிலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உப்புக்கட்டிகளும் வைக்கப்படும். நீர்நிலைகளின் தன்மை குறித்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல்லடம் அருகே, பி.ஏ.பி., வாய்க்கால் மட்டத்தை தாண்டி பாசன நீர் வழிந்து வீணாகி வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கான முதல் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதன் மூலம், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாய்க்கால் உடைப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாசன நீர் அவ்வப்போது வீணாவது தொடர் கதையாக உள்ளது.

இவ்வாறு பல்லடம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலை உடைத்துக் கொண்டு பாசன நீர் வழித்தடத்திலும் வீதிகளிலும் பாய்ந்து சென்றது.

இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறுகையில்: 

பல்லடம், மங்கலம் சாலை வழியாக வேலம்பாளையம், பூமலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் கிளை வாய்க்கால் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிளை வாய்க்காலின் மட்டத்தை தாண்டி அதிக அளவிலான தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் வாய்க்காலை தாண்டி வெளியேறும் தண்ணீர் வழித்தடத்திலும், வீதிகள் மற்றும் சாக்கடையிலும் பாய்ந்தோடி வருகிறது. சில தினங்களாக வாய்க்காலில் இருந்து வெளியேறும் பல ஆயிரம் லிட்டர் பாசன நீர் வீணாகி வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் இப்பகுதியில் தண்ணீர் வெளியேறி வீணானது. பிரதான வாய்க்கால் ஷட்டர்கள் மூலம் தண்ணீர் அளவை குறைத்திருக்க வேண்டும்.

கடைமடை விவசாயிகள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் சூழலில் நான்கு நாட்களாக பாசன நீர் வீணாகி வெளியேறி வருவது கவலை அளிக்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்து தண்ணீர் வீணாகாமல் தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News