செய்திகள்
சாலை மறியல்

புதிதாக டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு- கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2021-09-03 11:12 GMT   |   Update On 2021-09-03 11:12 GMT
திண்டுக்கல் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்டத்துப்பட்டி அன்னைநகருக்கும், பெரியார் நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தனர். இப்பகுதி மக்கள் அனைவரும் மக்காச்சோளம், முருங்கை உள்ளிட்ட விவசாயத்தை இழந்து வெளியில் பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடை திறந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி டாஸ்மாக் கடையை அமைக்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதனையும் மீறி கடை அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி குட்டத்துப்பட்டி, இந்திராநகர், பெரியார்நகர், அன்னைநகர் ஆகியபகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருந்தபோதும் கடை அமைக்கும் முடிவை கைவிடும்வரை தாங்கள் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன.

Tags:    

Similar News