செய்திகள்
நீதிமன்றம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-12-10 09:15 GMT   |   Update On 2020-12-10 09:15 GMT
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே சேப்பிளான்தோப்பு பகுதியை சேர்ந்தவர் போஸ் என்ற போஸ் மணி (வயது 34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர் கட்டிட பணியில் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் போஸ் மணி மதுகுடிப்பதற்காக பணம் கேட்கும்போது அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோல கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி அவர்களுக்குள் வாக்குவாதமாகி தகராறு ஏற்பட்டது. அன்றைய தினம் இரவில் அமுதாவின் தலை மீது கல்லை தூக்கி போஸ் மணி போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 13-1-2015 அன்று இறந்தார். மேலும் சம்பவத்தன்று அக்கம்பக்கத்தினருக்கு போஸ் மணி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை கொலை செய்தது மற்றும் மற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ் மணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் மனைவி அமுதாவை கொலை செய்ததற்கு ஆயுள்தண்டனையும், அபராதமாக ரூ.20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் போஸ்மணிக்கு விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் அவரது 3 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து போஸ்மணியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News