செய்திகள்
பாகிஸ்தான் விமானம்

தலிபான்கள் ஆட்சியில் காபூலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு வர்த்தக விமானம்

Published On 2021-09-13 15:16 GMT   |   Update On 2021-09-13 15:16 GMT
தலிபான்களின் ஆட்சியில் காபூலில் இருந்து புறப்பட்ட முதல் வெளிநாட்டு வர்த்தக விமானத்தில் சுமார் 70 பேர் இஸ்லாமாபாத் சென்றனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின. தலிபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. 

இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சென்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் காபூலில் இன்று காலை தரையிறங்கியது. அதில் 10 பேர் மட்டுமே வந்தனர். பின்னர் அங்கிருந்து சுமார் 70 பேருடன் இஸ்லாமாபாத் சென்றது. அவர்களில் பெரும்பாலானோர் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் ஊழியர்களின் உறவினர்கள் ஆவர்.

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார். 
Tags:    

Similar News