செய்திகள்
வைகோ

மருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ

Published On 2019-11-06 06:48 GMT   |   Update On 2019-11-06 06:48 GMT
மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
  • தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3081 மாணவர்கள் சேர்ப்பு
  • நீட் தேர்வுக்காக தனிப்பயிற்சி பெற்ற மாணவர்கள்தான் 100 விழுக்காடு சேர்ந்துள்ளனர்
  • மருத்துவக் கல்விக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறது. நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது என்பதை தொடர்ந்து நாம் கூறி வருகிறோம்.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 4-ந் தேதி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள தகவல்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3081 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெறும் 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்காக தனிப்பயிற்சி பெறாதவர்கள் மற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து, தனிப்பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தர்மபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 விழுக்காடு நீட் தேர்வுக்காக தனிப்பயிற்சி பெற்ற மாணவர்கள்தான் சேர்ந்துள்ளனர்.

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து நீட் தேர்வு எழுத தனிப்பயிற்சி பெற முடியாத நிலையில், மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி என்ற உண்மையை நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.



இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் விதிமுறைகள் வகுக்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் ஐந்து மாணவ-மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆள்மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதி உள்ள முறைகேடுகள் வெளிப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நடைபெறுகின்ற ஊழல்கள், முறைகேடுகளால் தகுதியற்றவர்கள்கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுவிடும் நிலை உருவாகி இருக்கிறது.

மொத்தத்தில் மருத்துவக் கல்விக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Tags:    

Similar News