செய்திகள்
கோட்டூர் மலைக் கிராமத்துக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வாக்கு எந்திரத்தை கொண்டு சென்றதை படத்தில் காணலாம

மலைக்கிராமங்களுக்கு கழுதை, குதிரைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

Published On 2021-04-05 22:14 GMT   |   Update On 2021-04-05 22:14 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கத்தரிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. இங்கு மொத்தம் 133 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு:

மலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கழுதை, குதிரைகள் மீது ஏற்றி அதிகாரிகள் பல கி.மீ. தூரம் நடந்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கத்தரிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. இங்கு மொத்தம் 133 வாக்காளர்கள் உள்ளனர். கத்தரிமலை கிராமம் அந்தியூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலையொட்டி இங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்டு பர்கூர் மலை அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் நடத்தும் மண்டல அதிகாரி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். பர்கூர் மலை அடிவாரத்தில் இருந்து கத்தரி மலை கிராமம் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பர்கூர் மலை அடிவாரத்தில் இருந்து கத்தரிமலை கிராமத்துக்கு செல்ல சாலைகள் கிடையாது. எனவே அதிகாரிகள் தங்கள் வாகனங்களை பர்கூர் மலை அடிவாரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்களிக்க தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை 2 கழுதைகள் மீது ஏற்றினார்கள்.

மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும். அவை தாக்கினால் உயிரிழப்புகள் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மலைக்கிராம மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு் கழுதைகளுடன் செங்குத்தான மலைப்பகுதியில் நடக்க தொடங்கினர்.

மலைக்கிராம மக்கள், எந்த எந்த இடங்களில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் என்பதை அறிந்து அதிகாரிகளை பாதுகாப்பாக வனப்பகுதி வழியாக அழைத்து சென்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்காக அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், துணை ராணுவப்படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி உடன் சென்றனர்.

இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் அதேபோல் கழுதைகள் மீது வாக்குப்பதிவு எந்திரங்கள், உபகரணங்கள் ஏற்றப்பட்டு கீழே நடந்து வருவார்கள்.

இதேபோல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் மலை, ஏரிமலை போன்ற மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேற்று கழுதைகள் மீது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் பாதை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனால் வாக்குச்சாவடி அதிகாரிகள் சுமார் 8 கிலோமீட்டர் மலைப்பகுதியில் நடந்து சென்றனர்.

இதேபோல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
Tags:    

Similar News