பெண்கள் உலகம்
சமையலறையை எப்படி அமைக்கலாம்?

பெண்கள் விரும்பும் வகையில் சமையலறையை எப்படி அமைக்கலாம்?

Published On 2022-02-12 02:22 GMT   |   Update On 2022-02-12 02:22 GMT
சமையலறையானது முற்றிலும் நவீன தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சமையலறையின் உட்புறப் பகுதிகளை முழுவதுமாக வெள்ளை நிறத்தில் வடிவமைக்கும் பொழுது அவை பார்ப்பதற்கு பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக உள்ளன.
சமையலறையானது அழகாக இருப்பதுடன் அமைப்பாகவும் இருந்தால் அதுகூடுதல் சந்தோஷம் தானே.சமையலறையில் ஒவ்வொரு பொருளையும் வைப்பதற்கு என்று தனித்தனியான இடங்கள் கரையான், பூச்சிகள் அண்டாத கேபினட்கள்,உபயோகப்படுத்துவதற்கு எளிதாக இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும் சமையல் மேடைகள், பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டோரேஜ் செல்ஃப்கள்,துருப்பிடிக்காத மற்றும் எளிதாக இயக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள், மேடைமீது புதைக்கப்பட்டிருக்கும் வசதியான அடுப்புகள் இவை அனைத்துமே அமைப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சமையலறை கட்டாயம் சந்தோஷத்தைக் கொடுப்பதோடு மிகவும் கச்சிதமான, அருமையான சமையல் அறையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

* மரத்தினால் செய்யப்படும் கேபினட்களை தண்ணீர் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக பாலிஷ் செய்யப்பட்ட மரங்களைப் பயன்படுத்தும் பொழுது அவை சமயலறைக்கு கூடுதல் அழகைத் தருவதுடன் அதிக வருடங்கள் நீடித்து உழைப்பதாக இருக்கின்றன.

* சில வீடுகளில் சமையல் அறைகளுடன் இணைந்தது போல் டைனிங் பகுதியும் அமைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். இதுபோன்ற சமையலறைகளில் டைனிங் மற்றும் சமையலறையை பிரிப்பதற்காக குறைந்த உயரத்தில் வரும் டிசைன் செய்யப்பட்ட கண்ணாடி பார்ட்டிஷன் பகுதிகளை உபயோகிக்கிறார்கள். இவை பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் சமையலறைக்கு ஒரு அருமையான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன.

* சமையலறையானது முற்றிலும் நவீன தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சமையலறையின் உட்புறப் பகுதிகளை முழுவதுமாக வெள்ளை நிறத்தில் வடிவமைக்கும் பொழுது அவை பார்ப்பதற்கு பளிச்சென்ற தோற்றத்தை தருவதாக உள்ளன. இதுபோன்ற சமையலறைகளில் சமையல் மேடை, ஸ்டோரேஜ் கேபினட்கள்,ஓவர் ஹெட் கேபினட்கள்,மாடுலர் கிட்சன் கவுன்டர்கள்,சமையலறை டைல்கள் என அனைத்துமே வெள்ளை நிறத்தில் இருப்பதுபோல் வடிவமைக்கிறார்கள்.

* பொதுவாகவே நம்முடைய சமையலில் வறுப்பது, பொரிப்பது என்பது அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிசுபிசுப்பை தவிர்ப்பதற்காகவே சமையலறையில் பொருத்தக்கூடிய பலவிதமான சிம்னிகள் வந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் சிம்னிகள் என்பது சமயலறையில் தவிர்க்கமுடியாத சமையலறை உபகரணம் என்று சொல்லலாம். இவ்வாறு சிம்னிகளைப் பொருத்துவதால் அவை சமையலறையில் பாத்திரங்களின் மீதும் அலமாரிகளின் மீதும் எண்ணை பிசுபிசுப்பு ஏற்படாமல் தவிர்க்க உதவுகின்றன.

* சமையலறையில் பொருத்தப்படும் குழாய்கள் திருகுவது போல் இல்லாமல் எளிதில் அசைத்து இயக்குவது போல் வருவது உபயோகப்படுத்துவதற்கு எளிதாக இருப்பதுடன் குழாய்களின் பாகங்களை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியத்தையும் தருவதில்லை.

* சமையலறை மேடைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் காய்கறிகளை வெட்டுவதற்கும் ,சப்பாத்தி மற்றும் பூரியை திரட்டுவதற்கும் தனியாக ஒரு இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா. ஆம்., இதற்காகவே பலர் சமையலறைகளில் சமையல் அறையின் மத்தியில் வொர்க் டேபிள் என்று சொல்லப்படுகின்ற மேடையை அமைத்துக் கொள்கிறார்கள். இதில் காய்கறிகளை கழுவி வெட்டுவதற்கு ஏற்றவாறு ஒரு சிங்க் மற்றும் போதுமான அளவு இடமானது கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மேடைகள் அமைக்கப்பட்டுள்ள சமையலறைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தை தருவதாக உள்ளன.

* அக்ரலிக் ஃபினிஷ் உடன் கூடிய கிச்சன் கேபினட் பார்ப்பதற்கு அழகாக க்ளாசி தோற்றத்துடன் இருப்பதோடு சுத்தம் செய்வதும் எளிது.

* மாடுலர் கிச்சன் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதுபோன்ற மாடுலர் கிச்சன்கள் அந்தந்த பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.பாத்திரங்களை இதுபோன்ற மாடுலர் கிச்சனில் வைக்கும்பொழுது அவற்றை அனாவசியமாக நேரம் செலவு செய்து தேட வேண்டி இருக்காது.

* சமையலறை மிகவும் சிறியதாக இருக்கும் பட்சத்தில் சமயலறை மேடை முதல் சுவரில் பதிக்கும் டைல்ஸ், கேபினெட்ஸ் என அனைத்திற்கும் மென்மையான வண்ணங்களை தேர்ந்தெடுத்தால் அவை சமையலறையை பளிச்சென்ற தோற்றத்துடனும் விசாலமாகவும் காட்டும்.

* சிறிய சமையலறையில் சுவற்றில் பெரும்பாலான இடத்தை ஸ்டோரேஜிற்காகப் பயன்படுத்தும்பொழுது அவை சமையலறையை ஓரளவு விசாலமான அறையாக காட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்..

* சமையலறையின் தரைக்கு உபயோகப்படுத்தப்படும் டைல்கள் மிகவும் வழவழப்பாக இல்லாமல் ஓரளவு சொரசொரப்பாக இருந்தால் சமையலறையில் தண்ணீர், எண்ணெய் மற்றும் எந்த உணவுப் பொருட்கள் சிந்தி இருந்தாலும் அதனால் வழுக்கி விழுவது தவிர்க்கப்படுகின்றது.இதுபோன்ற ஆன்டி ஸ்கிட் டைல்கள் குறிப்பாக வயதானவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவையாக உள்ளன.

* சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாதவர்கள் மேடை மற்றும் மேடையின் அடிப்புற கேபினெட்களுக்கு அடர்த்தியான வண்ணங்களை தேர்ந்தெடுத்து அமைப்பதன் மூலம் அழுக்கு படிந்தாலும் அவை வெளிப்படையாக தெரிவதில்லை. இதன் காரணமாக நேரம் கிடைக்கும் சமயங்களில் அவற்றைப் பொறுமையாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News