செய்திகள்
மம்தா பானர்ஜி

என்னை பணி செய்ய விடுங்கள்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை

Published On 2021-05-07 02:53 GMT   |   Update On 2021-05-07 02:53 GMT
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். அதேநேரம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசையும், பா.ஜனதாவையும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா :

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அரசியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டு உள்ளன. இதனால் மாநிலத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு, இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 4 நபர்களை கொண்ட குழு ஒன்றையும் மேற்கு வங்காளத்துக்கு அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் வன்முறையில் பாதிக்கப்பட்ட பா.ஜனதா தொண்டர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற மத்திய மந்திரி முரளீதரனின் வாகன அணிவகுப்பு நேற்று தாக்குதலுக்கு உள்ளானது. இது மத்திய அரசுக்கும், பா.ஜனதவினருக்கும் மேலும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். அதேநேரம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசையும், பா.ஜனதாவையும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.

கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள், அதாவது புதன்கிழமை மாலையிலேயே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கடுமையான கடிதம் ஒன்று வந்துள்ளது. அத்துடன் 4 உறுப்பினர் மத்தியக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மத்திய மந்திரி மாநிலத்தில் ஆய்வை தொடங்கியிருக்கிறார்.

இதெல்லாம் எதற்கு? மக்களின் தீர்ப்பை பா.ஜனதா நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எனக்கு ஒத்துழைக்க வேண்டும்.



கொரோனாவுக்கு எதிராக ஒரு கடுமையான போராட்டத்தை நாங்கள் தற்போது நடத்தி வருகிறோம். கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால்தான் யாரையும் மாநிலத்துக்குள் அனுமதிப்போம். அது மந்திரியாக இருந்தாலும் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

இல்லாதவர்கள் மாநிலத்துக்கள் நுழைய முடியாது. மேற்கு வங்காளத்துக்கு சிறப்பு விமானங்களில் வரும் மக்களும், வர்த்தகர்களும் கூட அனைவரின் பாதுகாப்புக்காக இந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நான் முதல்-மந்திரியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் கொல்கத்தாவில் பா.ஜனதா தொண்டர்களும், அவர்களது தலைவர்களும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். எனது பதவியேற்புக்கு முன்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.

தற்போது நான் பதவியேற்றிருக்கிறேன், மத்திய மந்திரிகளையும், மத்தியக்குழுவையும் அனுப்புவதை விட்டுவிட்டு, என்னை பணியாற்ற அனுமதியுங்கள்.

மாநிலத்தில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட 16 பேரில் பாதிபேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். மீதமுள்ள பாதிபேர் பா.ஜனதாவினரும், ஒருவர் சன்ஜுக்தா மோர்ச்சாவையும் சேர்ந்தவர் ஆவர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் உதயன் குகா, கூச்பெகர் மாவட்டத்தில் தாக்கப்பட்டுள்ளார். அவரது வலது கை உடைந்துள்ளது. அங்கு பா.ஜனதாவினருக்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. அங்கிருந்துதான் அதிகமான வன்முறை தகவல்கள் வருகின்றன.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும் அவர் மாநிலத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் பட்டியலிட்டார்.
Tags:    

Similar News