ஆன்மிகம்
நாராயணசாமி கோவிலில் தேரோட்டம் நடந்ததை படத்தில் காணலாம்.

உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் தேரோட்டம்

Published On 2019-07-02 05:12 GMT   |   Update On 2019-07-02 05:13 GMT
உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் பணிவிடை, உகப்படிப்பு, அய்யா வாகன பவனி, அன்னதர்மம் போன்றவை நடைபெற்றது. கடந்த 28-ந்தேதி கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 10 மணிக்கு அன்னதர்மம், பகல் 1 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு ஆகியவை நடந்தது. தொடர்ந்து 3 மணிக்கு ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெற்றது.

தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன் குடியிருப்பு, கோவில்விளை சந்திப்பு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேர் வரும் வீதிகளில் அய்யாவுக்கு பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். வழிநெடுகிலும் மோர், பழம், இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யானை முன் செல்ல பெண்கள் முத்துக்குடை ஏந்தி, மயிலாட்டம், கோலாட்டமும் நடந்தது. தேரோட்டத்தின் போது, கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மம், இரவு 8 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, அய்யா வாகன பவனி, கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றது.

தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடைபெற்றபோது, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News