செய்திகள்
துரப்பண கப்பல் பி.305-ல் இருந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பலை படத்தில் காணலாம்.

எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியது எப்படி?அதிர்ச்சி தகவல்கள்

Published On 2021-05-21 02:09 GMT   |   Update On 2021-05-21 02:09 GMT
பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய எண்ணெய் துரப்பண கப்பல் மூழ்கியது எப்படி என்பது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை :

‘டவ்தே’ புயல் காரணமாக கடந்த 16-ந் தேதியன்று மும்பை கடல் பகுதியில் வானிலை மோசமடைந்தது. கடல் சீற்றத்துக்கு உள்ளானது. இதனால் அன்று காலை 10.15 மணியளவில் பி-305 கப்பலின் 12 நங்கூரம் விலகின. கப்பலில் இருந்த ஊழியர்கள் கவலை அடைந்தனர். மறுநாளான 17-ந் தேதி வானிலை மேலும் மோசம் அடைந்து மதிய வேளையில் கப்பலுக்குள் கடல் நீர் புக தொடங்கியது.

இதனால் ஊழியர்களுக்கு உயிர் பயம் வந்தது. அவர்கள் உயிர் காக்கும் ஜாக்கெட்டை உடலில் அணிந்து கொண்டனர். கப்பல் மூழ்க தொடங்கியதால், இரவு 7 மணியளவில் அனைவரும் கப்பலில் இருந்து கடலுக்குள் குதித்து உயிரை காப்பாற்றி கொள்ள முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து நடுக்கடலில் போராடியவர்களை பல மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடனும், பிணமாகவும் மீட்பு குழுவினர் மீட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியவர்களை நெருங்க ெபரும் சிரமம் ஏற்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ஆபத்து குறித்து மீட்பு படையினருக்கு எப்போது தகவல் கிடைத்தது? மீட்பு குழுவினர் முழு பலத்தையும் காட்டினார்களா? என்பது போன்றவை மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்து உள்ளது.

இதில் எங்கோ ஏற்பட்ட ஒரு இடைவெளி காரணமாக தான் இத்தனை பேர் கடலோடு சமாதியானதாக மனித நேயமிக்கவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. சார்பில் எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்டு இருந்த ஆப்கான்ஸ் நிறுவனம், கப்பல் விபத்துக்கான காரணத்தை தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

புயல் தொடர்பாக எண்ணெய் துரப்பண பணியில் ஈடுபட்ட கப்பல்களுக்கு 14-ந் தேதி அன்றே எச்சரிக்கை விடுத்ேதாம். பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பி-305 கப்பல் எண்ணெய் கிணறு பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில், அது பாதுகாப்பான இடம் என்று கருதி நிலை நிறுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட 16-ந் தேதி மாலையில் வானிலை அதிதீவிர மோசம் அடைந்தது. புயலின் வேகத்தால் கப்பல் மூழ்குவதை தடுக்க முடியவில்லை. எங்களது ஊழியர்களின் துயரத்துடன் துைண நிற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News