செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

கொரோனா பரவலை தடுக்க புதுவையில் 612 வாக்குசாவடிகள் அதிகரிப்பு

Published On 2021-02-13 07:09 GMT   |   Update On 2021-02-13 07:09 GMT
கொரோனா பரவலை தடுக்க புதுவையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக உயர்த்தி உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புதுவை வந்தார். 2 நாட்களாக அவர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுவை ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். கொரோனாவால் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஒரே மாதிரியாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.

புதுவையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1564 ஆக உயர்த்தியுள்ளோம்.

தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

புதுவையிலும், தமிழகத்திலும் தற்போது மது விலையில் மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுவையில் இருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவச பொருட்கள், வேட்டி,சேலை, பரிசுப்பொருட்கள் ஆகியவை பதுக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.

அதற்காக கலால் துறை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் இதுதொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பணம் பரிசு பொருள் தந்ததற்காக தமிழகத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணம், பரிசுபொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இருப்பதால் ஒரு கட்சிக்கு சாதகத்தை ஏற்படுத்தாதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டைதான் மீண்டும் நாடி முறையிட முடியும் என்றார்.

Tags:    

Similar News