ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது

Published On 2019-08-17 05:59 GMT   |   Update On 2019-08-17 05:59 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கோவில் குருக்கள், கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து படிச்சட்டத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும், வருகிற 25-ந் தேதி மாலை அன்ன வாகனத்தில் அம்மன் புறப்பாடும், அடுத்தமாதம்(செப்டம்பர்) 1-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 7-ந் தேதி காலை படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடும் நடக்கிறது.

8-ந் தேதி வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன்புறப்பாடும், 9-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும், 10-ந் தேதி காலை படிச்சட்டத்திலும், மாலையில் பூத வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் வெள்ளி ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது.

17-ந் தேதி காலை 9 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது. 22-ந் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழாவும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது. விழா நாட்களில் காலை 9 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் அம்மன் புறப்பாடு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News