உள்ளூர் செய்திகள்
செம்மரத்தின் மேல் பகுதி வெட்டப்பட்டு தனியாக கிடப்பதையும், அடிப்பகுதி வெட்டி எடுத்து செல்லப்பட்டு இருப்பதையும்

பல லட்சம் மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல்

Published On 2022-05-06 10:26 GMT   |   Update On 2022-05-06 10:26 GMT
திருச்சி அருகே தோப்பில் வளர்ந்திருந்த பல லட்சம் மதிப்புள்ள செம்மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் அன்பு என்ற நேரு. இவருக்கு சொந்தமான தென்னந்தோட்டம் தா.கவுண்டம்பட்டியில் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நேரு தோட்டத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

தோட்டத்தின் ஒரு பகுதியில் சுமார் 25 ஆண்டுகள் பழைமையான சுமார் 50 அடி உயரமுள்ள செம்மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் குறித்து வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் நேரு பதிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை தோட்டத்திற்கு வந்து விட்டு நேரு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது பிரமாண்டமாக இருந்த செம்மரம் வெட்டி சாய்க்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மரத்தின் மேல் பகுதியில் மட்டும் விட்டு வைத்து விட்டு சுமார் 35 அடி உயரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. உடனே நேரு இதுதொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

மேலும் போலீசில் புகாரும் அளித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். சுமார் 25 ஆண்டுகள் பழைமையான அந்த செம்மரம் பல லட்சம் மதிப்பிற்கு விற்பனையாகும் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில் தான் நோட்டமிட்டு மர்ம நபர்கள் மரத்தை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் மரத்தை வெட்டி கடத்திச் சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News