ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் மார்கழி திருவிழாவை பாரம்பரியப்படி நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்

Published On 2020-12-07 05:53 GMT   |   Update On 2020-12-07 05:53 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் தேர் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி தேரோட்டமும், 30-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடப்பதாக கோவில் நிர்வாகம் தேதி குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 3-ம் திருவிழாவான 23-ந் தேதி ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியும், 25-ந் தேதி வீரமார்த்தாண்டன் கோவில் முன் உமாமகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூவரும் ஒன்று போல் நிற்க அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வாகனத்தில் கருட வடிவில் வந்து சாமியை வணங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

9-ந் தேதி தேரோட்டமும், அன்று இரவு சப்த வர்ண நிகழ்ச்சியும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் வெளிப்புறத்தில் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவிழாவை எப்படி நடத்துவது என்று கோவில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே திருவிழா நடத்த முடியும் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திருவிழாவை சிறப்பாக நடத்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். அதேபோன்று இந்த ஆண்டும் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News