செய்திகள்
கொள்ளை

தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் மாதா கீரிடம்-நகைகள் கொள்ளை

Published On 2019-09-28 11:27 GMT   |   Update On 2019-09-28 11:27 GMT
தஞ்சை அருகே பூண்டி மாதா கோவிலில் மாதா சொரூபத்தில் இருந்த சுமார் 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா கோவில் உலகப் புகழ்பெற்ற பசிலிக்காவாக விளங்கி வருகிறது. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது. அப்போது ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்துசேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியரால் திருத்தி அமைக்கப்பட்டது. 1999-ல் இந்த ஆலயத்துக்கு போப் ஜான்பால் மிமி என்பவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

பூண்டி மாதா திருத்தலத்தின் பலி பீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பலிபீடத்தில் மாதாவின் சொரூபம் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் தினமும் திருப்பலி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஆலயத்தின் அதிபர் பங்குத்தந்தை பாக்கியசாமி அடிகளார் திருப்பலி நடத்தினார். பின்னர் ஆலயத்தின் உள்ள அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன.

இதையடுத்து இன்று காலை ஆலயத்தின் கதவுகளை காவலாளிகள் திறந்து உள்ளனர். அப்போது பலிபீடத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவுகளின் பூட்டிகள் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி இதுபற்றி உடனடியாக ஆலய வளாகத்தில் தங்கியிருக்கும் ஆலய அதிபர் பாக்கியசாமியிடம் தெரிவித்தார்.

உடனடியாக அவர் அங்கு வந்து பார்த்தபோது மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கிரீடம், தங்க முலாம் பூசப்பட்ட ஜெபமாலை, மாதாவின் கையில் அணிவித்திருந்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நெக்லெஸ் உள்ளிட்ட சுமார் 18 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி பங்குதந்தை பாக்கியசாமி திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் ஆலயத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆலய வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது முகத்தை மூடியபடி மர்மநபர் ஒருவர் பலிபீடம் ஒரு கேமிராவை துணியால் மூடுவதும், மற்ற கேமிராக்களை வேறு திசையில் திருப்பி வைப்பதும் தெரிந்தது. மேலும் விசாரணையில் நேற்று இரவு திருப்பலி முடிந்து ஆலய கதவுகள் பூட்டப்படும் போதே மர்மநபர்கள் ஆலயத்துக்குள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் இரவு நகைகளை கொள்ளையடித்து விட்டு உள்ளேயே தங்கி இருந்த மர்மநபர் காலையில் காவலாளிகள் ஆலய கதவுகளை திறக்கும்போது அதில் ஒரு கதவின் வழியாக தப்பி சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

இதையடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்றமர்மநபர் அதே பகுதியை சேர்ந்தவரா? அல்லது வெளிநபர்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆலயத்தில் வழக்கம்போல் அதிபர் பாக்கியசாமி இன்று காலை திருப்பலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பிரசித்திப் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் மர்மநபர்கள் புகுந்து மாதாவின் சொரூபத்தில் அணிவித்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News