செய்திகள்
திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பணத்தை எண்ணிபார்த்த அதிகாரிகள்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2021-03-02 11:05 GMT   |   Update On 2021-03-02 11:05 GMT
தஞ்சை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பூண்டியில் நேற்று தேர்தல் பறக்கும்படை தாசில்தார் செல்வராணி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது காரில் ரூ.4 லட்சம் இருந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரை சேர்ந்த குமாரிடம்(வயது 43) இந்த பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரிடம் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததும் பணத்தை அவர் திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவையாறு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணம் திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல நேற்று முன்தினம் இரவு பாபநாசம் அருகே உள்ள பல்லவராயன்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை ரோடு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம்(62) என்பவருக்கு சொந்தமான காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பாபநாசம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News