செய்திகள்
சடையம்மா - திருவொற்றியூர்

சென்னை சித்தர்கள்: சடையம்மா - திருவொற்றியூர்

Published On 2021-10-25 11:03 GMT   |   Update On 2021-10-25 11:03 GMT
சடையம்மா 1987-ம் ஆண்டு தொடக்கத்தில் தனது இறுதி காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். சமாதி அடையும் நாளை அவர் முன்கூட்டியே தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார்.
பவுர்ணமி தினத்தன்று சென்னையில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகிய மூன்று அம்மன்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.  இந்த மூன்று அம்மன்களையும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று அழைக்கிறார்கள்.

பவுர்ணமி தினத்தன்று காலையில் மீஞ்சூர் அருகே மேலூரில் உள்ள திருவுடையம் மனையும் மதியம் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மனையும், பிற்பகலில் திருமுல்லை வாயலில் உள்ள கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று வரையறுத்து உள்ளனர்.

இந்த மூன்று அம்மன்களில் ஞான சக்தியாக திகழ்பவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன். இந்த அம்மனுக்கு சிவப்பு நிற சேலை மற்றும் பலாப்பழம் படைத்து வழிபட்டால் அனைத்து செல்வங்களும் சேரும் என்று சொல்கிறார்கள்.

கருணை ததும்பும் விழி கொண்ட வடிவுடையம்மனை பல நூறு ஆண்டுகளாக பலர் வழிபட்டு பலன் பெற்று உள்ளனர். சமீப காலத்தில் பட்டினத்தாரும், வள்ளலாரும் வடிவுடையம்மனை வழிபட்டு மிகப்பெரிய பலன்களை அடைந்து உள்ளனர்.

வள்ளலாருக்கு வடிவுடையம்மன் தனது கரங்களால் உணவு ஊட்டியதாக கூறப்படுகிறது. வடிவுடையம்மனின் தரிசனம் பெற்ற வள்ளலார், “வடிவுடையம்மன் மாணிக்கமாலை” என்ற 100 பாடல்கள் கொண்ட பாமாலை இயற்றி உள்ளார்.

இந்த பாடல்களை படித்தால் வடிவுடையம்மனின் அருள் கிடைக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையாகும். பட்டினத்தார், வள்ளலார் போன்றே கமலாம்மாள் என்ற பெண்மணியும் வடிவுடையம்மனின் அருளை பெற்று வரலாறில் இடம் பிடித்து உள்ளார்.
வடிவுடையம்மனின் மீது கொண்ட பக்தியால் இந்த கமலாம்மாள் சித்தராகவே மாறிய புனிதவதி என்ற பெருமைக்குரியவர். இவரது பூர்வீகம் வடசென்னை. இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் என்று சொல்லுகிறார்கள். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதில் இருந்தே வடிவுடையம்மனை தினமும் வழிபடுவதை வழக்கத்தில் வைத்து இருந்தார்.

தினமும் தனது கைப்பட பூக்களை பறித்து வந்து அதை மாலையாக கட்டி வடிவுடையம்மனுக்கு சமர்பித்து அழகு பார்ப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தார். படிப்பை முடித்த பிறகு  கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.

கைவினை பொருட்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்த கமலாம்மாள் அந்த பள்ளியில் சிறந்த ஆசிரியையாக வலம் வந்தார். உரிய வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் வடிவுடையம்மனுக்கு அருட்சேவை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்த கமலாம்மாள் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.

திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டால் அனுதினமும் தன் கைகளாலே வடிவுடையம்மனுக்கு மாலை கட்டி கொடுத்து வரும் புனிதமான பணிக்கு இடையூறு ஏற்பட்டு விடும் என்று பயப்பட்டார். இதனால் திருமணம் செய்து கொள்ள உறுதியாக மறுத்து விட்டார்.

ஒருகாலகட்டத்துக்கு பிறகு அவரது பக்தியை புரிந்து கொண்ட அவரது குடும்பத்தினர் அவரை வற்புறுத்தவில்லை. வடிவுடையம்மன் மீது கொண்ட பாசத்தால் அவரை நினைத்து மவுன விரதம் இருப்ப தையும் கமலாம்மாள் கைகொண்டார்.

பிறகு வடிவுடையம்மன் அருளால் ஆழ்ந்த தியானத்திலும், யோகாவிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் காரணமாக கமலாம்மாளின் ஞான நிலையும், அருள் நிலையும் ஒப்பற்ற உயர்வுக்கு சென்றது. இதனால் ஆசிரியை பணியை விட்டு முழு நேரமும் வடிவுடையம் மனுக்கு தொண்டு செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தியானம், ஞானம் போன்றவற்றில் அதிக மாக ஈடுபட்டதால் கமலாம்மாள் சித்த புருஷருக்கு உரிய அனைத்து அம்சங் களையும் பெற்றார். அவரது பார்வை தோஷங்களை விரட்டும் வகையில் மாறியது. ஒருவரை பார்த்ததும் அவர்களது முன்வினை மற்றும் முற்பிறவிகளை சொல்லும் ஆற்றலை பெற்றார்.

வடிவுடையம்மன் ஆலயம் அருகில் ஒரு பகுதியில் தனக்கென்று ஒரு இடம் அமைத்துக்கொண்டு அங்கேயே தவத்தில் ஈடுபட்டார். மிகப்பெரிய பள்ளம் தோண்டி அதற்குள் இறங்கி தவம் இருந்தார். இதனால் அவரது சித்து தன்மை மேலோங்கியது. அவர் சொல்வது பலித்தது.

அவரது இந்த சிறப்புகள் சென்னை மக்களிடையே பரவியது. இதனால் நிறைய பேர் கமலாம்மாளை தேடி சென்றனர். அவர்களுக்கு ஆசி வழங்கி அவர் மேன்மைபடுத்தினார். நாளுக்கு நாள் கமலாம்மாளை தேடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
கமலாம்மாள் தன் கைப்பட திருநீரு வழங்கினால் நோய்கள் தீருவதாக நம்பினார்கள். இதனால் கமலாம்மாளின் சிறப்புகள் தமிழகம் முழுக்க ஒரு காலகட்டத்தில் பரவியது.

தியானம், தவம் உள்ளிட்ட தொடர் வழிபாடு காரணமாக கமலாம்மாளின் தலைமுடி நீண்ட சடையாக வளர்ந்து மாறியது. தரையை தட்டும் அளவுக்கு சடை வளர்ந்தது. இதனால் அவரை பக்தர்கள் சடையம்மா என்று அழைக்க தொடங்கினார்கள். நாளடைவில் கமலாம்மாள் என்ற பெயர் மறைந்து “சடையம்மா” என்ற பெயர்தான் அவருக்கு நிரந்தரமாக நிலைத்தது.

(இலங்கையிலும் சடையம்மா என்ற பெயரில் ஒரு பெண் சித்தர் வாழ்ந்தார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த சித்தர் இலங்கையில் புகழ் பெற்ற சித்தர்களில் ஒருவராக திகழ்ந்தார். அவரை போன்றே அதே பெயரில் சென்னையிலும் பெண் சித்தர் தோன்றியதை சிறப்பு ஒப்பீடாக கருதுகிறார்கள்.)

சடையம்மா தான் பெற்ற ஆன்மீக பலன்களை அனைவரும் பெற வேண்டும் என்று முடிவு செய்தார். குறிப்பாக திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகிய மூன்று அம்மன்களையும் ஒரே இடத்தில் வணங்க செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக தனது ஆசிரியை பணி மூலம் கிடைத்த பணத்தை கொண்டு திருவொற்றியூர் பேசின் சாலை பகுதியில் சிறிய இடம் ஒன்றை வாங்கினார்.

அந்த இடத்தில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகிய மூன்று அம்மன்களுக்கும் தனித்தனி சன்னதி கட்டி தினமும் வழிபாடு செய்து வந்தார். மூன்று அம்மன்களையும் தரிசிக்க மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயல் ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு பதில் இந்த ஒரே இடத்தில் வழிபட்டு பலன் பெறலாம் என்று கூறினார்.

அவர்சொன்ன படி பக்தர்கள் அந்த மூன்று அம்மன்களையும் அங்கு வழிபட்டு மிகவும் பலன் பெற்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் சடையம்மா நிறுவிய மூன்று அம்மன் ஆலயத்திற்கும் பக்தர்கள் வருவது அதி கரித்தது. அந்த ஆலயம் அருகிலேயே தனக்கு ஒரு குடில் அமைத்து அவர் தங்கினார்.

அந்த குடிலுக்குள் பள்ளம் தோண்டி தனது தவசாலையை ஏற்படுத்தி இருந்தார். அந்த நிலையில் சடையம்மாவை வழிபட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பிணிகள் நீங்கி ஆன்ம பலத்தை பெற்றனர்.

என்றாலும் சடையம்மா தினமும் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட தவறுவதில்லை. வடிவுடையம்மன் முன்பு நின்று கண்ணீர் மல்க அவர் பாடிய பாடல்கள் மனதை உருக்குவதாக அமைந்தன. நிறைய பக்தர்களுக்கு சடையம்மாவின் வழிபாடு ஒரு வழிகாட்டியாக மாறியது.

சித்த புருஷருக்கு உரிய அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்தாலும் சடையம்மா எந்தவொரு அற்புதங்களையும் தன்னலம் கருதி நிகழ்த்தி காட்டியதில்லை. பக்தர்களின் பொதுவான நலனுக்காக தனது சக்தியை பயன்படுத்தினார். ஆனால் அந்த அற்புதங்கள் தொகுக்கப்படாததால் பதிவு செய்யப்படாமல் போய்விட்டன. சடையம்மாவின் அற்புதங்கள் தற்போது பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன.

சடையம்மா 1987-ம் ஆண்டு தொடக்கத்தில் தனது இறுதி காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். சமாதி அடையும் நாளை அவர் முன்கூட்டியே தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார். அதாவது புரட்டாசி மாதம், பவுர்ணமி தினத்தன்று தனது உடலில் இருந்து உயிரை பிரித்துக் கொள் வேன் என்று கூறி இருந்தார்.

ஆனால் தனது இறுதி நாள் பற்றி அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. என்றாலும் மூன்று அம்மன் ஆலய பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக அந்த ஆலய பொறுப்புகளை தனது ஆன்மீக அன்பர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.

அவர் சொன்னது போலவே 1987-ம் ஆண்டு புரட்டாசி மாதம், பவுர்ணமி தினத்தன்று காலையில் பூஜைகள் அனைத்தையும் முடித்து விட்டு தவத்தில் ஆழ்ந்தார். இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி கண்ணை மூடி அமர்ந்தார். அந்த கோலத்திலேயே அவர் தனது ஆத்மாவை பிரித்துக்கொண்டு பரிபூரணமடைந் தார்.

சடையம்மா முக்தி அடைந்த தகவல் அறிந்ததும் அவரது பக்தர்கள் அவரை ஜீவ சமாதியில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மூன்று நாட்களுக்கு பக்தர்களின் அருளாசிக்காக சடையம்மாவின் உடல் வைக்கப் பட்டது. பிறகு அவர் வாழ்ந்த குடிலிலேயே அவர் ஜீவ சமாதி வைக்கப்பட்டார். 1987-ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த எம்.ஜி.ஆர். இதுபற்றி அறிந்து சடையம்மா ஜீவ சமாதிக்கு அனுமதி கொடுத்ததாக ஒரு பதிவு இருக்கிறது.

தற்போது அந்த ஜீவ சமாதி மீது லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வாழ்ந்த காலத்தில் எத்தகைய அருளை சடையம்மா வழங்கினாரோ அதே போன்று தற்போதும் அவர் வழங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக மூன்று அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தி விட்டு சடையம்மாவுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்குவதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த ஜீவ சமாதி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் பேசின் சாலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ளது. சடையம்மா ஜீவ சமாதி என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. மூன்று அம்மன் ஆலயம் என்று கேட்டால் சொல்லிவிடுகிறார்கள்.
Tags:    

Similar News