செய்திகள்
தேவாலா அட்டி பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் காத்துக்கிடக்கும் பெண்களை படத்தில் காணலாம்.

தேவாலா அட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி

Published On 2021-04-14 17:24 GMT   |   Update On 2021-04-14 17:24 GMT
தேவாலா அட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் நீர் நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் பரவலாக காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவாலா அட்டி பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் லாரிகளில் தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இருப்பினும் மக்களின் தேவைகளுக்கு அந்த குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யும் ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுகுறித்து தேவாலா அட்டி பகுதி மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. இருப்பினும் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளை உரிய முறையில் பராமரித்து தடையின்றி குடிநீர் வழங்க முடியும். ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மழை பெய்வதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை. ஆனால் மீதமுள்ள மாதங்களில் வறட்சியால் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி விடுகிறது. தற்போது லாரிகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் சில குடங்களில் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது.

இதனால் காலி குடங்களுடன் மீண்டும் லாரிகள் எப்போது வரும் என சாலையோரம் பல மணிநேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் தடையின்றி போதிய குடிநீர் கிடைக்க நீண்டக ால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News