சிறப்புக் கட்டுரைகள்
மருமகளிடம் வெறுப்பை காட்டும் மாமியாரிடம் மாற்றம் வருமா

மருத்துவம் அறிவோம் - மருமகளிடம் வெறுப்பை காட்டும் மாமியாரிடம் மாற்றம் வருமா ?

Published On 2021-12-06 14:03 GMT   |   Update On 2021-12-06 14:03 GMT
மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் மருமகளிடம் வெறுப்பை காட்டும் மாமியாரிடம் மாற்றம் வருமா என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த உலகில் மருமகளை மகளாய் பார்க் கும் மாமனார்கள், மாமியார்கள் அநேகர் உள்ளனர்.
மாமனார், மாமியாரை பெற்றவரைப் போல் பார்க்கும் மருமகள்களும், மருமகன்களும் அநேகர் உள்ளனர்.
பெற்றோரை, மனைவியை, கணவனை கண் போல் பாதுகாக்கும் ஆண்களும், பெண்களும், அநேகர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கோடானு கோடி வணக் கங்கள்.

இது கல்யாண சீசன். மங்கள ஓசைகளான மேளமும், நாதஸ்வரமும் ஆங்காங்கே ஒலித்து நம்மை மகிழ்விக்கின்றது. தை மாதத்தில் இது இன்னமும் கூடும். பளபள புடவை, பூ மணம், வளையல் சத்தம், கலகல பேச்சு, கமகம சாப்பாடு, இவையெல்லாம் பரம் பரையாய் நம் ரத்தத்தில் ஊறிப் போனவை.

கடந்த 2 வருடங்களாக அமைதியாய் கட்டுப்பாட்டினை மதித்து இருந்த இவை இன்று தலை தூக்கி நிற்கின்றன. சுகாதார கவனத்தோடு இவை புதுமை பெற்று விட்டன. அனைவருக்கும் மகிழ்ச்சிதான். இந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்க இறைவன் அருள் வாராக.

சரி, இப்போது கல்யாண நிகழ்வுகளுக்கு வருவோம். நம் முன்னோர்கள் மனித வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். திருமணம் என்பது ஒரு ஆண் தன் மனைவியோடு சேர்ந்து இல்லற தர்மத்தினை முறையாய் மதித்து வாழ்ந்து, கடமைகளை ஆறறி மனதால் இருவரும் படிப்படியாய் உயர்ந்து வாழ்வினை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது. முன்பு ஆண் புலியினை வேட்டையாடி நகத்தினை கொண்டு வந்து பலசாலியாய், வீரனாய் பெண் வீட்டில் வந்து காண்பித்து பெண்ணை மண முடித்து சென்றான். இந்த வரதட்சணை, சொத்து, நகை இவையெல்லாம் காலப்போக்கில் சேர்க்கப்பட்டது என்றே தோன்றுகின்றது. அது பூதாகரமாய் வளர்ந்து விட்டது.

மூக்கு உள்ளவரை ஜலதோஷம் என் பார்கள். அதுபோல நம் நாட்டில் மனித சமுதாயம் உள்ள வரை வரதட்சணை கொடுமை ‘கொரோனா வைரஸ் போல் பல ரூபங்களில் மாறி வந்து கொண்டிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இங்கு நான் குறிப்பிடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும் குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே. மருமகளால் திண்டாடும் கணவன். அவனது பெற்றோர் பற்றியும் தொடர் கதையே எழுதலாம். நாம் இப்போது இங்கு பகிர்ந்து கொள்ளப் போவது முதுகு எலும்பு இல்லாத மாப்பிள்ளை பற்றியும் அவனது பெற்றோர் என்ற பெயரில் ஆடும் ஈவு இரக்க மற்ற ஜென்மங்களைப் பற்றியும் தான்.

இவையெல்லாம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கம் தானே. பல கஷ்டங்களுடன் வாழப் பழகிய நாம் இந்த பாதிப்போடும் வலியை பொறுத்து வாழத்தானே செய்கி றோம். ஸ்டவ் வெடிப்பு, அரிவாள் வெட்டு என நம் பெண்கள் எத்தனையோ பேர் வீர மரணம் அடைந்துள்ளனரே. இதை விட கொடுமையை எந்த நாடும் பார்த்திருக்குமா எனலாம். மேலும் கடந்த சில வருடங்களாக விழிப்புணர்வு காரணமாக இவையெல்லாம் அதிக அளவில் குறைந்து விட்டனவே என்று கூட சொல்லலாம். நான் கூட அப்படிததான் நினைத் திருந்தேன். சமீபத்தில் நான் கேட்க நேர்ந்த சம்பவம் என் நினைப்பை மாற்றியது. விழிப் புணர்வு என்பது போதவில்லை. ஒவ்வொரு கோடையிலும், குளிரிலும், மழை காலத்தில் நாம் பாதுகாப்பு விழிப்புணர் வினைக் கொடுப்பது போல் திருமண கால நேரங்களில் பல திருமண பாதுகாப்பு விழிப்புணர்வினை தெடர்ந்து பல நிபுணர்கள் எழுத வேண்டும் என்று தோன்றியது.

நான் கேட்ட சமீப நிகழ்வினை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். பெண் வீட்டார் குடும்பத்தினைப் பார்ப்போம். பெண்ணின் தந்தை சமீபத்தில் இறந்திருந்தார். அவரு டைய நோய் பாதிப்பு பணத்தினைக் கரைத் திருந்தது. 2 பெண் ஒரு பையன் உள்ள குடும் பம். பையன் கடுமையாய் உழைத்து வீட்டை காப்பாற்றும் நிலை. மூத்த மகள் சென்னை யில் படித்து உயர்ந்த இடத்தில் வேலையும் கிடைத்து விட்டது. தாயாருக்கு ஒரு பயம். தந்தை இல்லாத குடும்பம். பெண்ணை வேலைக்கு அனுப்பி சாப்பிடுகின்றார்கள் என்று யாரும் குறைத்து பேசி விடக்கூடாது என்ற மானப் பிரச்சினை? தன் சமூகத்திற்குள் மனம் முடிக்க வேண்டும். இல்லையென்றால் உற்றார், உறவினர் கட்டுப்பாடில்லாமல் பெண்ணை வளர்த்து விட்டாள். தந்தை இல்லாவிட்டால் இப்படித் தான் என வாயில் வந்ததை பேசுவார்களே என்ற கவலையில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிப் பிடித்தார்.

மாப்பிள்ளை பெண்ணை விட படிப்பும் குறைவு. சம்பளமும் குறைவு. இது ஒரு பெரிய விஷயமல்ல. மனம் தான் முக்கியம். இது என்னுடைய பார்வை. ஆனால் பிரச்சினை அதுவல்ல. பெண்ணின் தாயாருக்கு எப்படியோ முதலில் ஒரு பெண்ணை கரை ஏற்றி விட வேண்டும் என்ற முனைப்பு. பெண்ணும் குடும்ப நிலை, அம்மாவின் கவலையை பார்த்து சரி எனச் சொல்லி விட்டாள். இரு வீட்டினரும் பேசி திருமணம் நிச்சயம் செய்தனர்.

மாப்பிள்ளை வீட்டினரும் நகை, நிலம் என்ற பெயரில் இவர்களை வதைத்தனர். இவர்களும் ‘பூம் பூம்‘ மாடாய் தலையாட்டினர்.
மாப்பிள்ளையின் அம்மா மெத்த படித்தவர். உயர்ந்த வேலையில் இருப்பவர். நடமாடும் நகைக் கடையாய் வலம் வருபவர். அலங்கார பூஷிதையார் தோற்றம் அளிப்பவர். இவரது படிப்பும், உயர் வேலையும் அனைவரையும் இவரை பெருமையாக பார்க்க வைத்தது.


டாக்டர் கமலி ஸ்ரீபால்
நல்லபடியாக திருமணமும் முடிந்தது. அதன் பிறகு நடந்த நிகழ்வுதான் அனை வரையும் பதை பதைக்க வைத்தது. கல்யாண வீட்டிற்கு தராசு, எடைக் கல்லுடன் ஒருவர் வந்தார். பெண்ணின் அனைத்து நகைகளும் உரசி எடை பார்க்கப்பட்டன. பெண் வீட்டார் குறுகி நின்றனர். பையனின் தாயார் இத்தோடு நிற்கவில்லை. நிலம் உடனடி பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே மணப்பெண் தன் வீடு வர முடியும் என்றார். கூடியிருந்த யாரும் வாயைத் திறக்கவில்லை. பலர் சொன்னது அதெல்லாம்  சர்வ சாதாரண நிகழ்வு தானே. பெரிது படுத்தி பேச என்ன இருக்கின்றது என்றனர். 

அப்படியானால் கீழ்கண்ட சந்தேகங்களுக்கு நாமே நம் மனசாட்சிபடி பதில் கூறி பார்ப்போமே.
* எந்த ஒரு இடத்திலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்ற முனைப்பினை விட்டு விட முடியுமா? அல்லது விட்டு விட வேண்டுமா?
* படித்து, உயர் பதவியில் இருக்கும் பணக்காரர்கள் மாமியார் ரூபத்தில் பல கோர குணங்கள் கொண்டிருந்தால் இந்த படிப்பும், பதவியும் எதற்கு?
* கொடூரமாக நடந்து கொள்ளும் மாமி யாரை கட்டுப்படுத்தத் தெரியாத மாமனா ரும் கொடூரமானவர் தானா? பிறருக்கு சங்கடங்களை ஏற்படுத்துபவரா? அல்லது பல் பிடுங்கிய பெட்டிப் பாம்பாக வாழ்கின்றாரா?
மனைவியின் பேச்சினைக் கேட்டு பெற்றோர்களை நடுத்தெருவில் விடும் ஒரு ஆணின் செயல் எத்தனை கொடுமை யானதோ அதே அளவு கொடுமை தான் அம்மாவின் தவறான தூண்டுதலால் ஒரு மனைவியின் மனதினைக் கொல்வதும் ஆகும் அல்லவா?
பெண்ணைப் பெற்று விட்டால் தாழ்ந்து போக வேண்டும் என்று இனியும் எத்தனைப் பெற்றோர்கள் இருக்கின்றீர்கள்?
கடன் பட்டாவது திருமணம் என்ற பெயரில் பெற்ற பெண்ணினை கை கழுவ முடியுமா? தவறுகள் கூடுவதற்கு நீங்களும் ஒரு காரணம் ஆக வேண்டுமா?
படித்த பெண் பண்பாக முறையாக தைரியமாக இவைகளை எதிர்க்கக் கூடாதா?
இது என்ன திருமணக் கொள்ளையா?
சுற்றமும், உற்றமும் என்ற பெயர் எதற் காக? விருந்து சாப்பிட மட்டும் தானா?
எந்த ஒரு உறவினையும் முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமைதி யாகவும் போராடலாமே. முயன்று உணர வைக்கலாமே.

பெண் என்பவள் பெற்றோருக்கு அத்தனை சுமையா என்ன? இல்லை கணவன் வீட்டில் தான் காலம் முழுவதும் சுமையாய் இருப்ப வளா? மாறாக அனைத்தையும் தாங்கும் சுமை தாங்கியே பெண்தானே.
இப்படிப்பட்ட கணவனை நம்பி மண வாழ் வில் அடியெடுத்து வைக்கும் பெண் ணின் மனநிலை எப்படி இருக்கும்? வாழ்வுக் குத் தான் என்ன உத்தரவாதம்?

பொதுவில் பலர் கூறும் கருத்து பெண்கள் கணவன் வழி உறவுகளை குறிப்பாக கணவனின் பெற்றோர்களை ஒதுக்கி தனிக் குடித்தனம் போகின்றனர். அதனால் தான் பிள்ளையை  பெற்றவர்கள் இவ்வளவு கடுமையாக இருக்கின்றனர் என்று நியாயம் கற்பிக்கின்றனர். கண்டிப்பாய் அந்த பெண்ணை உற்றார்களும், பெற்றோர்களும் திருத்த வேண்டும். தனிக்குடித்தனம் வேறு. வேரோடு வெட்டுவது வேறு. முதுமையான இரு தரப்பு பெற்றோருக்கும் இவர்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? அதற்காக சொத்தும், பணமும் பிடுங்கி பெண் வீட்டார் வயிற்றில் அடிப்பது முறையானதா?

நல்ல பெண்ணை விட நகை, சொத்து, வரதட்சணை என செல்லும் ஆண் அவனது பெற்றோரைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், ‘கழுதைக்கு தங்கம் பிடிக்காது” என்ற பழமொழி பொருத்தமாக இருக்குமோ?
ஆக ஒருவர் தன் எந்த ஒரு உறவிலும் சரி, செயலிலும் சரி கழுதையாக இருக்க விரும்புகின்றாரா? அல்லது சராசரி மனித னாகவாவது இருக்க விரும்புகின்றானா என்பதனை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இது ரோடு வேண்டும், பாலம் வேண்டும் எனக் கேட்கும் பொது முயற்சி கிடையாது. அனைவரும் இணைந்து இதனை ஒவ் வொருவர் வீட்டிலும் சரி செய்து கொண்டி ருக்க முடியாது. ஒவ்வொருவரும் தன் சுய முயற்சியால் இதனை செய்தால் மட்டுமே அவரது குடும்பம் சிறப்பாக இருக்க முடியும்.

யாரின் சாபமும் யாருக்கும் வேண்டாம். அதுவும் ஒரு பெண் மனம் நொந்து போனாலே அதனை செய்தவருக்கு அது சாபம்தான். ஆக இன்றே அனைவரும் மகிழ்ச்சியான வழிக்கு மாறுவோம்.
Tags:    

Similar News