செய்திகள்
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்ட காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Published On 2021-09-13 09:40 GMT   |   Update On 2021-09-13 09:40 GMT
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. தற்போது புதிதாக 19 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்;

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 2493 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில்  வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் நகராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

மேலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், சிதிலமடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடிகள், குடியிருப்புகளில்  இருந்து 2 கி.மீ., தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. தற்போது புதிதாக 19 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் வினீத், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

இதில் அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 11, பல்லடத்தில் 3, திருப்பூர் தெற்கு தொகுதியில் 2, காங்கேயம், அவினாசி, உடுமலைப்பேட்டையில் தலா1 என மொத்தம் 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 

இந்த வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு ஆட்சேபனைகள் இருப்பின் வருகிற 20-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலரிடம் மனு அளிக்கலாம்.

இறுதி செய்யப்பட்ட புதிய வாக்குச்சாவடி பட்டியலின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்பு நவம்பர் 1-ந்தேதி வெளியிடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News