செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ தங்க கட்டிகள்.

விமானத்தின் இருக்கைக்கு அடியில் கிடந்த 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

Published On 2021-04-18 02:57 GMT   |   Update On 2021-04-18 02:57 GMT
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்று விட்டனா். அதன்பின்னர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லவேண்டும்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். விமானத்தில் உள்ள ஒரு இருக்கை சற்று தூக்கியபடி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது அதில் 2 பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த பார்சல்களை எடுத்து பிரித்து பார்த்தனா். அதில் 2 பார்சல்களிலும் 6 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து விமான இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து இருக்கலாம்? அல்லது அந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்வதை அறிந்து, இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு உள்நாட்டு பயணிபோல் வந்து அதை எடுக்க முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, துபாயில் இருந்து சென்னைக்கு அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் யார்? என்று விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News