செய்திகள்
4 விக்கெட் வீழ்த்திய ஷமி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 5ம் நாள் முடிவில் இந்தியா 64/2

Published On 2021-06-22 18:11 GMT   |   Update On 2021-06-22 18:11 GMT
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சவுத்தம்டன்:

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. 

முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் 49 ரன்னும், சவுத்தி 30 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.



சுப்மான் கில் 8 ரன்னில் சவுத்தியிடம் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 30 ரன்னில் சவுத்தியிடம் வீழ்ந்தார்.

புஜாராவும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News