உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

தமிழகம் முழுவதும் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2022-01-19 11:14 GMT   |   Update On 2022-01-19 13:45 GMT
மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவிலிலும் பக்தர்கள் காலையிலேயே திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் அதிகளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 5 நாட்கள் கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தைப்பூச நாளான நேற்றும் முருகன் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு தரிசனம் செய்ய முடியாமல் இருந்த பக்தர்கள் இன்று காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா நேற்று பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. 5 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் இன்று சாமி தரிசனத்துக்காக திரண்டனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக அங்கப்பிரதட்சணம் செய்தனர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்திருந்தனர்.

இதன் காரணமாக கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி கோவிலுக்கு வருடந்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பழனியை நோக்கி பாத யாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் பல்வேறு மண்டபங்களில் தங்கி இருந்தனர்.

இன்று காலை நடை திறக்கப்பட்டதும் படிப்பாதை, யானைப்பாதை வழியாக காத்திருந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க தடுப்புகள் அமைத்து ஆயிரம் பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பிரித்து அனுப்பினர். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்கள் அங்கேயே தங்க விடாமல் அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தபோதும் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் அதிகாலையிலேயே சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் திரண்டனர். கோவிலில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்பு காசிக்கு இணையாக கருதப்படும் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர்.

கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரத்தில் இன்று திரண்டதால் ராமேசுவரம் கடற்கரை பகுதி களைகட்டி காணப்பட்டது.

அதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவிலிலும் பக்தர்கள் காலையிலேயே திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனால் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கும் பகுதி பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் 5 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அதிகளவில் திரண்டனர். கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள். இதேபோன்று அந்தியூரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் காணப்பட்டனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி சமயபுரம் கோவிலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு இருந்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் நுழைவு வாயிலிலேயே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பக்தர்களை முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்யுமாறும் அறிவுரை கூறி அனுப்பினர்.

கட்டண தரிசனம் செய்வதற்காக பல வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் வசதிக்காக அங்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருந்தது.

இதேபோல் பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், உத்தமர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இன்று விடுமுறை நாளா? என்று கேள்வி எழுப்பும் வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிகளவில் திரண்டு இருந்ததை காண முடிந்தது.


Tags:    

Similar News