செய்திகள்
பாப்பாகோவில் பெரிய நரிக்குடியில் பன்றிகள் சேதப்படுத்திய வயலை படத்தில் காணலாம்.

நாகை அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் - விவசாயிகள் கவலை

Published On 2021-01-09 15:26 GMT   |   Update On 2021-01-09 15:26 GMT
நாகை அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிலுமே பிரதான தொழிலாக உள்ளது.

இந்த பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு புயல், கனமழை என பல்வேறு இடர்பாடுகளால் 60 சதவீதத்துக்கும் மேல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளள.

இந்த நிலையில் பாப்பா கோவிலை சுற்றியுள்ள பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன. இந்த பன்றிகளானது அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்துக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியில் விவசாயிகள் கூறியதாவது:-

பாப்பா கோவில் ஊராட்சி பெரிய நரியங்குடி, குடிநெய்வேலி பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அருகில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும் காட்டு பகுதியில், தஞ்சம் அடைந்துள்ள இந்த பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இவ்வாறு 100 ஏக்கரில் நெற்பயிர்களை நாசப்படுத்தி உள்ளது. பன்றிகள் நடந்து செல்லும் போது நெற்பயிர்கள் சாய்ந்து வயலிலே அழுகி விட்டது.

நெற்பயிர்களை நாசப்படுத்தும் பன்றிகளை பிடிக்க ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றிகள் பிடிக்கப்பட்டன. முழுமையாக பிடிக்காமல், குறைந்த அளவிலேயே பிடிக்கப்பட்டதால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து நெற்பயிர்களை மேய்கிறது. எனவே வயல்களுக்கு நடுவில் சிறிய குடில் அமைத்து இரவு, பகலாக கண்காணித்து வருகிறோம்.மேலும் பட்டாசு வெடித்தும் பன்றிகளை விரட்டி வருகிறோம். இருந்த போதிலும், பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியவில்லை.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம் போதுமானதாக இல்லை என்றாலும், எஞ்சிய பயிர்களை அறுவடை செய்து நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால் இந்த பன்றிகளின் தொல்லையால் ெபரும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, நெற்பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News