உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஊராட்சிகளில் கூடுதல் கொரோனா பரிசோதனை மையம் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-01-12 05:31 GMT   |   Update On 2022-01-12 05:31 GMT
கடந்த முறை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு தயார் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் கொரோனா வார்டுகள் இரவு - பகலாக தயாராகிவிட்டன.

ஒமைக்ரான் தொற்று பாதித்தவருக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இருக்காது. எனவே முறையான சிகிச்சை பெற்று தனிமையான சூழலில் இருந்தாலே போதும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

கடந்த முறை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வார்டுகள் உருவாக்கப்பட்டன. தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இம்முறையும் கிராமங்களிலேயே கொரோனா முன் பரிசோதனை மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊராட்சியில் தலா ஒரு இடத்தில் முன் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.டி.ஓ.,க்கள் கூறியதாவது:

கிராமப்புற மக்கள் கொரோனா தொற்று அறிகுறி இருந்தாலே பாதுகாப்பான சூழலில் தங்கி பரிசோதனை செய்து கொள்ள கடந்தாண்டு, ‘கொரோனா கேர் சென்டர்’ அமைக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டும் முன்பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொற்று அறிகுறி பாதித்தவரை குடும்பத்தினரிடம் இருந்து தனிமையில் வைத்து தொற்று உறுதியானதும் உரிய சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்துக்கு ஒரு தற்காலிக ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க இயலாது. மாறாக அறிகுறி உள்ளவரை கண்டறிந்து மற்றவருக்கு பரவாத வகையில் கொரோனா சிகிச்சை அளிக்க இத்தகைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சியில் கண்டறியப்படும் தொற்றாளரை சிகிச்சைக்கு சேர வேண்டிய மையங்கள் குறித்தும் பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் இந்த கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்தது.

கணக்கம்பாளையம் ஊராட்சியிலும் தொற்று அதிகம் பரவியிருந்தது. கொரோனா பாதித்தவர்கள் தனிமையான சூழலில் தங்கியிருக்க தலா ஒரு இடத்தில் முன் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

அரசு பள்ளி மற்றும் சமுதாயக்கூடத்தில் கட்டில்களை வைத்து, முன் பரிசோதனை மையம் தயார் என தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளிலும், கூடுதல் கொரோனா முன் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மாநகராட்சிக்கு போட்டியாக அருகே உள்ள ஊராட்சிகளிலும் பரவியிருந்தது. எனவே மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள ஊராட்சிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, கூடுதல் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News