உலகம்
பனிப்பொழிவில் சிக்கிய கார்

பாகிஸ்தானில் பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள்... குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு

Published On 2022-01-08 16:55 GMT   |   Update On 2022-01-08 16:55 GMT
முர்ரி பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன.
லாகூர்:

பாகிஸ்தானின் பிரபல மலை வாசஸ்தலமான முர்ரியில் திங்கட்கிழமை முதல் பனிப்பொழிவு உள்ளது. பனிப்போர்வை போர்த்திய ரம்மியமான அப்பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.  முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அதேசமயம் நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதனால் வாகனங்களில் இருந்தவர்கள் குளிரில் நடுங்கினர். ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் கடுமையான குளிர் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்று இரவு நிலவரப்படி 10 குழந்தைகள் உள்பட 22 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 



சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முர்ரியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. இன்னும் சுமார் 1000 வாகனங்கள் சிக்கி உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கடும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் பலர் இறந்ததையடுத்து முர்ரி பகுதியை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முர்ரி நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News