செய்திகள்
கோப்புபடம்

வைகையில் இருந்து மணல் கடத்திய 9 பெண்கள் உள்பட 14 பேர் கைது

Published On 2021-09-30 13:18 GMT   |   Update On 2021-09-30 13:18 GMT
மானாமதுரை அருகே நள்ளிரவில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்திய 9 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை:

மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் அடிக்கடி மணல் கடத்துவது அதிகரித்து உள்ளது. போலீசாரும் அவ்வப்போது சோதனை நடத்தி மணல் கொள்ளையர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் மானாமதுரை கால்பிரிவு விலக்கு பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்ததும் மணல் திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் லாரியில் ஏறி தப்பி முயன்றனர். ஆனால் லாரி அங்குள்ள மணலில் சிக்கி கொண்டது. உடனே லாரியில் இருந்த சிலர் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடிய சிலரை மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பாக மானாமதுரை பகுதியை சேர்ந்த பாலமுருகன்(வயது 26), மருதுபாண்டியன்(38), பிரேம்நாத்(21), மூர்த்தி(21), கார்த்தி(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அதோடு வைகை ஆற்றில் இருந்து மணலை திருடுவதற்காக தலைசுமை தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்ட மானாமதுரை மறவர் தெருவை சேர்ந்த 9 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

மணலில் சிக்கிய லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். அங்கிருந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் கூறும் போது, வைகை ஆற்றில் மணல் கடத்துவது சட்டவிரோதம். மணல் கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News