செய்திகள்
விழுப்புரம் மாதா கோவில் அருகில் சாலையோரமுள்ள பள்ளத்தை படத்தில் பார்க்கிறீர்கள்.

விழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2020-11-20 13:40 GMT   |   Update On 2020-11-20 13:40 GMT
விழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதா கோவிலில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் 2-வது தெருவில் நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறிய பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினரோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதன் விளைவு சிறியதாக இருந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். சாலையோரமுள்ள இந்த பள்ளத்தால் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று அதிவேகமாக வந்தால் அவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் இந்த பள்ளத்தை மூடாமல் விட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்பலியாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், காவு வாங்குவதற்காக காத்திருக்கும் அந்த பள்ளத்தை மூடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?
Tags:    

Similar News