செய்திகள்
பங்குச்சந்தை

கொரோனா அதிகரிப்பு... இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

Published On 2021-04-12 06:20 GMT   |   Update On 2021-04-12 06:20 GMT
மும்பை பங்குச்சந்தையில் காலை முதலே வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சியடைந்து, சென்செக்ஸ் 1470 புள்ளிகள் சரிந்தன.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 1.68 லட்சமாக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1.35 கோடியாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 904 பேர் பலியாகி உள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,70,179 ஆக உயர்ந்துள்ளது.

நோய் பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. 



இந்நிலையில், கொரோனா அச்சம் இன்று பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. இதனால் காலை வர்த்தகத்தின்போது பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. 

காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1470 புள்ளிகள் சரிந்து 48,120 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 439 புள்ளிகள் சரிந்து, 14,395 என வர்த்தகமானது.
Tags:    

Similar News