ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

அன்பு செலுத்துங்கள், கருணை காட்டுங்கள்

Published On 2020-10-20 07:11 GMT   |   Update On 2020-10-20 07:11 GMT
நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
பரந்து விரிந்த இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, பரிபாலனம் செய்பவன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவன் எல்லோருக்கும் பொதுவானவன், எந்த தேவையும் இல்லாதவன். அதேநேரத்தில் தேவைகளை வேண்டி தன்னை நாடி வரும் அடியார்களின் தேவையை நிறைவேற்றும் தாயுள்ளம் கொண்டவன். அவன் மாபெரும் கருணையாளன். அவனிடம் இருகரம் ஏந்திக்கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லாதவன்.

“அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்” என்று திருக்குர்ஆன் (1:3) விளக்குகிறது.

அத்தகைய சிறப்பு மிக்க இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்றால் அவன் நமக்கு காட்டிய வழியில் நடக்க வேண்டும். திருக்குர்ஆன் கட்டளைப்படியும், இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றியும் நாம் வாழ வேண்டும். இறையச்சத்துடன் வாழ்ந்து, கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், மற்றும் ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றி வந்தால் அந்த ஏக இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் பெற முடியும்.

சக மனிதர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள். இது குறித்து நபிகள் கூறியதாக, நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ, அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ, அவரது மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ்வும்நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ, அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).

நம்மில் பலர் வசதி, வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். சிலருக்கு அந்த நிலை இல்லாமல் இருக்கலாம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்பதையே இந்த நபி மொழி வலியுறுத்துகிறது. அவ்வாறு ஒரு முஸ்லிம், சக முஸ்லிம்களின் தேவையை கருணையுடன் நிறைவேற்றினால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுவான், துன்பங்களை நீக்குவான் என்பதை இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

நாம் ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

“ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.” (அறிவிப்பாளர்: நுஅமான் இப்னு பஷீர் (ரலி), நூல்: புகாரி)

அவ்வாறு நாம் கருணையுடன் மற்றவர்களிடம் நடந்துகொண்டால், இறைவனின் கருணைப்பார்வை நமக்கு கிடைக்கும் என்பதையும் நபிகளார் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

“(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர், (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்”. (அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி)

“ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி)

எனவே நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.

பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர், சென்னை.
Tags:    

Similar News