செய்திகள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலின் புதுவியூகம்

Published On 2019-12-02 05:53 GMT   |   Update On 2019-12-02 05:53 GMT
தி.மு.க.வை அடுத்து வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் பொதுதேர்தலில் வெற்றி பெற வைக்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கி உள்ளார்.
சென்னை:

அகில இந்திய அளவில் தேர்தல்களுக்கு வியூகம் அமைத்து தருவதில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர்.  இவர் தலைமையிலான ‘ஐ பேக்’ என்ற நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமே பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் வியூகங்களும் தான் என்பது பின்னர் தெரிய வந்தது. அடுத்து பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியில் அமைவதற்கும் காரணமாக இருந்தார்.

சமீபத்தில் பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழக அரசியல் கட்சிகள் அணுகியதாக தகவல்கள் வந்தன.

கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். அவர் மற்ற கட்சிகளை புறக்கணித்துவிட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.

தனது நிறுவனத்துக்காக 150க்கு மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து அவர்கள் மூலமாக இதற்கான பணிகளை தொடங்கினார். பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன.  கமல் கட்சிக்காக பணிபுரிந்தாலும் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டின் பிற கட்சிகளுடனும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின.

அ.தி.மு.க, ரஜினி என பிரசாந்த் கிஷோர் தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக பணியாற்ற இருப்பதாக செய்திகள் வருகின்றன.

தி.மு.க.வுக்கு இதுவரை ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சுனில்.  அவர் தலைமையிலான குழு நமக்கு நாமே பிரசார பயணம் தொடங்கி, தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார யுக்தி மற்றும் ஸ்டாலினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அவரது பங்கும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு பிறகு சுனில் மீதான நம்பிக்கை குறைந்து போனதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், உதயநிதியை தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமித்தது சரியல்ல என்று சுனில் கருத்து தெரிவித்தது மு.க.ஸ்டாலின் மற்றும்  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொல்லி கொள்ளும் அளவுக்கு ஆறுதல் வெற்றியை கூட பெற முடியவில்லை. இப்படியே போனால் எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க., ரஜினி- கமல் வியூகத்தில் தோல்வியை தழுவ நேரிடும் என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்று கட்சியினர் கூறுகின்றனர்.

இதனை நன்றாக புரிந்து கொண்டதால் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலினே சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி சர்வாதிகாரியாக சில முடிவுகளை எடுப்பேன் என அதிரடியாக பேசினார். அதன் தொடர்ச்சியாகவே தி.மு.க.வில் நீண்ட நாட்களாக ஆலோசகராக வழி நடத்தி வந்த சுனில் சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தி.மு.க.வை அடுத்து வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் பொதுதேர்தலில் வெற்றி பெற வைக்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கி உள்ளார்.

இதற்காக சரியான வியூகங்களை வகுக்க அரசியல் திட்டமிடுதலில் கொடி கட்டி பறக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தின் உதவியை அணுகியுள்ளார்.   

இவரது ஆலோசனையின் பேரிலேயே உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. திட்டம் வகுத்துள்ளதாக தெரிகிறது. பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனைகளால், தி.மு.க. மீண்டும் வெற்றிகளை குவிக்குமா? என்பது விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தெரிய வரும்.  அதற்கான வியூகங்களையும் அக்கட்சி வகுத்து வருகிறது.
Tags:    

Similar News