செய்திகள்
வகுப்பு இடைவெளியில் மாணவிகள் தண்ணீர் குடித்த காட்சி

அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கீடு

Published On 2019-11-15 03:32 GMT   |   Update On 2019-11-15 03:32 GMT
மாணவர்கள் தண்ணீர் குடிக்க அனைத்து பள்ளிகளிலும் வகுப்பு இடைவெளியில் 10 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் விழா சிறப்புரையாற்றினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.நடராஜ், விருகை வி.என்.ரவி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜி.லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சென்னை கன்னிமாரா பொது நூலகக்குறிப்பு உதவியாளர் லோ.புகழானந்த் உள்பட 33 பேருக்கு நூலக பணியில் சிறப்பாக தொண்டு செய்ததற்காக டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதும் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் இணைந்து வழங்கினார்கள்.



முன்னதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

எதிர்கால இந்தியாவை உருவாக்கும் வல்லமை மாணவர்களுக்கு தான் உள்ளது. இந்த மாத இறுதியில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும். அதேபோல் பள்ளிகளுக்கு 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அடுத்த மாதம் (டிசம்பர்) வழங்கப்பட உள்ளன.

7 ஆயிரத்து 500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ முறையும் அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்குள் ‘அட்டல் டிங்கர் லேப்’ 1,500 பள்ளிகளில் கொண்டு வரப்பட உள்ளது. பள்ளிக்கல்வி துறை சார்பில் 413 மையங்களில் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்புக்கான பயிற்சி கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 500 சி.ஏ. பயிற்சியாளர்களை கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

அதேபோல், பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்கல்வி கற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழா முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பிறகும் அந்த இடைவெளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் ஒதுக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். வகுப்பு முடிந்ததும் நீர் குடிக்கும்போது மாணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற டாக்டர்களின் ஆலோசனைபடி இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தினை பின்பற்றுபவர்களுக்கு மட்டும் இல்லாமல், எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும். ஒரு மாணவரின் கல்வித்திறன் எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து கொள்வதற்காக தான் இது கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களை கஷ்டப்படுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல.

மாணவர்களின் இடைநிற்றல் என்ற அளவுக்கு அரசு அனுமதிக்காது. வினாக்கள் எளிதாகவே கேட்கப்படும். இதன் மூலம் ஏழை-எளிய மாணவர்கள் சிறந்த கல்வியை பெறமுடியும். 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என்று வந்து இருக்கும் சுற்றறிக்கை தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News