வழிபாடு
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-01-10 04:10 GMT   |   Update On 2022-01-10 04:10 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை நடக்கிறது.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் செய்யலாம்.

13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முக்கிய வி.ஐ.பி. பக்தர்களுக்கு பிரேக் தரிசனம், இலவச தரிசனம், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் திருப்பதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மட்டும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு ஒருமுறை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 7,500-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவற்றில் 1300-க்கும் மேற்பட்ட அறைகள் சீரமைக்கப்படுகின்றன. இதனால் திருப்பதியில் அறைகள் வாங்கி தங்கி திருமலைக்கு வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலை நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. துவாதசி அன்று காலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது. லட்டு வினியோக வளாகத்தில் செயல்பட்டு வரும் 31 கவுண்ட்டர்களுக்கு பதிலாக 41 கவுண்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்படும். அங்கு 6 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னப்பிரசாதம், கல்யாண கட்டா, மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவையாற்றுவதுடன், திருமலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே 48 மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை சான்றிதழை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News