செய்திகள்
பிவி சிந்து

ஒலிம்பிக்கில் தங்கத்திற்காக ஒரு இடம் காலியாக உள்ளது: பிவி சிந்து சொல்கிறார்

Published On 2019-09-13 09:37 GMT   |   Update On 2019-09-13 09:37 GMT
எனது அறையில் ஒலிம்பிக் தங்கத்திற்காக ஒரு இடம் காலியாக உள்ளது என்று பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று முத்திரை பதித்தார். இதில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

பிவி சிந்துவின் அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியாகும். அடுத்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடக்கிறது. அவர் 2016- ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று பி.சி.சிந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

6 பெரிய போட்டிகளில் இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கமே பெற்றது மிகவும் காயத்தை ஏற்படுத்தியது. தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது அனைத்துக்கும் மருந்தாகி விட்டது.

இறுதிப்போட்டியில் நான் தோற்கும் நிலை குறித்து மக்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். அவர்களுக்கு எனது ராக்கெட் மூலம் பதில் அளித்து விட்டேன்.

எனது பட்டியலில் ஒரே ஒரு தங்கம் (ஒலிம்பிக்) மட்டுமே நிலுவையாக உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்காக இருக்கிறது. விருதுகள் வைக்கும் இடத்தில் அதற்கான இடம் காலியாகவே உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தங்கத்துக்கான பயணம் மிகவும் கடினமாக இருக்கும். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் எனது முதல் போட்டியாகும்.

தர வரிசை குறித்து நான் கவலைப்படுவது இல்லை. அடுத்து வரும் சீனா மற்றும் தென் கொரியா ஓபன் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.

மகளிர் ஒற்றையர் வரிசையில் சாய்னா நேவால், எனக்கு பின் யாரும் இல்லாதது சற்று கவலை அளிக்கிறது. ஜூனியர் அளவில் பல்வேறு நாடுகளின் வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்திய வீராங்கனைகள் கடினமா உழைக்க வேண்டும்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறியுள்ளார்.

பிவி சிந்து நாட்டின் 3-வது உயரிய விருதான பத்ம பூசனுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News