லைஃப்ஸ்டைல்
மணப்பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் ‘வெட்டிங் டயட்’ உணவுகள்

மணப்பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் ‘வெட்டிங் டயட்’ உணவுகள்

Published On 2021-11-13 06:36 GMT   |   Update On 2021-11-13 06:36 GMT
பெரும்பாலான இளம் பெண்கள் இப்போது தவறான உணவுப் பழக்கத்தையும், தவறான நேரத்தில் உணவு உண்ணுவதையும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு தயாராகும் எல்லா பெண்களுக்குமே அழகு அவசியமானதாக இருக்கிறது. அழகு என்றதும் ‘மேக்அப்’ செய்து கொள்வது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். திருமண நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே அழகை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் மணப் பெண்களின் நிஜமான அழகு அவர்களது ஆரோக்கியத்தில்தான் இருக்கிறது.

மணப்பெண் உற்சாகம், உவகை, சுறுசுறுப்போடு வலம்வரவேண்டும் என்றால் ஆரோக்கியம் மிக அவசியம். அந்த அழகு நிறைந்த ஆரோக்கியத்தை பெறுவதற்கு திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண்கள் ‘வெட்டிங் டயட்’ என்ற உணவுமுறையை பின்பற்றவேண்டும். வாய்ப்பிருந்தால், திருமணத்திற்கு வரன் பார்க்க தொடங்கிவிடும்போதிலிருந்து (அதாவது ஒரு வருடத்திற்கு முன்பிருந்து) இந்த வெட்டிங் டயட் உணவுப் பழக்கத்திற்கு பெண்கள் மாறிவிடுவது மிக நல்லது.

பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் உடலை பற்றிய உண்மைகளை தாங்களே புரிந்துகொள்வதில்லை. உடலை புரிந்துகொள்வது என்பது உடல் எடை, உயரம், உடலில் இருக்கும் நோய்கள், பார்க்கும் வேலை- வேலை பார்க்கும் நேரம்- அதன் தன்மை, தூங்கும் நேரம், எடுத்துக்கொள்ளும் ஓய்வு, உங்களிடம் இருக்கும் உற்சாகம் அல்லது சோர்வு, நீங்கள் உண்ணும் உணவு, பருகும் பானங்கள்.. போன்ற பல விஷயங்களையும் உள்ளடக்கியது.

இவைகளை எல்லாம் ஆராய்ந்து இதில் பெண்கள் தெளிவு பெற்றால்தான், ஒவ்வொரு பெண்ணும் அவரவர் உடலை பற்றி அறிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதை அறிந்துகொண்டால்தான் உங்களுக்கு பொருத்தமான உணவு எது? பொருந்தாத உணவு எது? என்பதை கண்டறிய முடியும். உங்கள் வாழ்க்கை முறையில் எது சரி; எதை மாற்றியமைக்கவேண்டும் என்ற முடிவுக்கும் வர முடியும்.

பொதுவாக நல்ல உணவுப் பழக்கம் என்றாலே, காய்கறி மற்றும் பழ வகைகளை சாப்பிடுவதுதான் என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலருக்கு சில வகை காய்கறிகளும், சில வகை பழங்களும் பிடிக்காது. அதனை கண்டறியவேண்டும். குறிப்பாக திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், உடல் எடை அதிகரிக்கவும், அசிடிட்டி ஏற்படவும் காரணமான உணவுகளை கண்டறிந்து தவிர்த்திடவேண்டும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய் கறிகளும் மாம்பழம், பலா பழம் போன்றவைகளையும் மிக குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடவேண்டும்.

பெரும்பாலான இளம் பெண்கள் இப்போது தவறான உணவுப் பழக்கத்தையும், தவறான நேரத்தில் உணவு உண்ணுவதையும் கடைப்பிடித்து வருகிறார்கள். திருமணத்திற்கு தயாராகும்போதே அவர்கள் முதல் வேலையாக சரியான உணவுப் பழக்கத்திற்கு திரும்பவேண்டும். அதற்கு அவர்கள் செய்யவேண்டிய முதல் காரியம், அனுபவம் வாய்ந்த ஊட்டச் சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவதுதான். அவர் உங்கள் உடல்நிலை, மனநிலை, தொழில்நிலை போன்ற அனைத்தையும் கருத்தில்கொண்டு உங்களுக்கான வெட்டிங் டயட்டை பரிந்துரைப்பார். திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அதனை பின்பற்றினால் அவர்களுக்கு ஆரோக்கியத்தோடு அழகும், புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

திருமணம் நிச்சயம் செய்யப்படும் காலகட்டத்தில் பெற்றோரும், குடும்பத்தினரும் மணப்பெண் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள். அதிக அளவில் ருசியான உணவை சமைத்து வழங்குவதுதான் அதிக பாசத்தின் வெளிப்பாடு என்று தவறாக கருதிக்கொண்டு, நிறைய உணவை சாப்பிடும்படி அவர்களிடம் திணிக்கிறார்கள். அதோடு விருந்து, உபசரணை என்ற பெயர்களில் அவர்களது இயல்பான உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றிவிடுகிறார்கள். நண்பர்களும், தோழிகளும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் ‘பார்ட்டி’வைத்து புதியவகை உணவுகளை அதிக அளவில் உண்ண வற்புறுத்துகிறார்கள்.

அது மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் மணப்பெண்களை ஷாப்பிங் மற்றும் திருமண வேலைகள் சூழ்ந்துகொள்ளும். அந்த வேலைப்பளுவால் அவர்களது உணவு நேரம் மாறிவிடுகிறது. அது நல்லதல்ல. திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் உணவு உண்ணவேண்டிய நேரத்திலும், உணவின் அளவிலும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். இஷ்டத்துக்கு வெளி உணவுகளை சாப்பிடாமல், வீட்டு உணவினை மட்டுமே சாப்பிட முயற்சிக்கவேண்டும்.

சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகிவிடுவதை தவிர்க்க, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் பருகிவிடுங்கள். அதுபோல் தினமும் விழித்ததும் வெறும் வயிற்றில், மிதமாக சுடும் நீரை இரண்டு கப் அளவுக்கு பருகும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது எட்டு கப் நீரை பருகிவிடவும் வேண்டும். பழச்சாறுவை பருகுவதற்கு பதில், அவ்வப்போது பழங்களை நன்றாக மென்று சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

பசியும் கட்டுக்குள் இருக்கும். உணவின் அளவைப் பொறுத்தவரையில் தினமும் மூன்று நேரம் உண்ணும் உணவை பிரித்து ஆறு நேரமாக சாப்பிட முன்வரவேண்டும். சாதம், இறைச்சி வகைகளின் அளவை குறைத்துவிடலாம். பழங்கள், காய்கறி, கீரை, மீன், முட்டையின்வெள்ளைக்கரு போன்றவை உடலுக்கு ஏற்றது. மணப்பெண்கள் கண் மற்றும் சருமப்பொலிவை விரும்புவார்கள். அதற்கு ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கிய கேரட், தக்காளி மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடவேண்டும்.

லவ் மேரேஜ் ன்றாலும் அரேஞ்டு மேரேஜ் என்றாலும் மணப்பெண்களுக்கு முகூர்த்தம் முடியும் வரை ஏதாவது ஒருவிதத்தில் மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். அதிக மனஅழுத்தம் மலச்சிக்கலை தோற்றுவிக்கும். அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு, மலச்சிக்கல் ஏற்படாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும். அதுபோல் மணப் பெண்கள் சரியான தூக்கமின்றியும் அவதிப்படுவார்கள். அத்தகைய நெருக்கடிகளை போக்க முளைவிட்ட தானியங்கள், வெண்டைக்காய், பாதாம் போன்ற கொட்டை வகைகள், பேரீச்சம் பழம், மாதுளை, பூண்டு, கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பெண்களில் பலர் வயதுக்கு ஏற்ற சீரான உடல் அமைப்பையும், உடல் எடையையும் கொண்டிருப்பதில்லை. பெரும்பாலானவர்கள் சற்று குண்டாகவோ அல்லது மிக ஒல்லியாகவோ காட்சியளிக்கிறார்கள். குண்டாக இருப்பவர்கள், உணவுப் பழக்கத்தால் மேலும் எடை அதிகரித்துவிடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு தக்கவாறு தங்கள் ஊட்டச்சத்தியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்டு உணவுமுறையை வகுத்துக்கொள்ளவேண்டும். உணவை பெருமளவு குறைத்துவிட்டால் உடல் எடை குறையும் என்று நினைப்பது தவறு. உணவின் அளவை அதிரடியாக குறைத்தாலும் உடல் எடை அதிகரிக்கும். ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்படும். வெட்டிங் டயட் என்ற பெயரில் பொருந்தாத உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் தலைசுற்றுதல், தலைவலி, மூட்டு வலி, முடி உதிர்தல், சோர்வு போன்ற பல்வேறு தொந்தரவுகள் தோன்றும்.

ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு தயாராகும் போது குடும்பத்தினரின் பெரும் நச்சரிப்பிற்கு உள்ளாகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சிறுமி போல் இருக்கிறாள் என்றும், நோய்வாய்ப்பட்டவள் போன்று காணப்படுகிறாள் என்றும், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படுவாள் என்றும் சொல்லி, நிறைய சாப்பிட கட்டாயப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட அவசியம் எதுவும் தேவையில்லை. ஒல்லியாக இருப்பது குறையல்ல. அவர்கள் சமச்சீரான சத்துணவுகளை போதுமான அளவு உட்கொண்டால் போதுமானது. ஒல்லியான பெண்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் திருமணத்திற்கு பின்பு சற்று பூசிமொழுகினாற் போன்ற உடல்வாகுக்கு மாறிவிடுகிறார்கள். தலைப்பிரசவத்திற்கு பிறகு, சராசரி பெண்களைப் போல் அவர்களும் உடல் எடையை குறைக்கவேண்டிய நிலையை அடைந்துவிடுகிறார்கள். அதனால் ஒல்லியாக இருப்பவர்களும், சமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவர்களை அப்படியே தொடர அனுமதியுங்கள்.

உணவில் பெண்களுக்கு எதிரியாக இருப்பவை இனிப்பு, உப்பு, எண்ணெய் போன்றவை. ஒவ்வொருமுறை நீங்கள் உணவின் முன்னால் உட்காரும் போதும் இந்த மூன்றும் எந்த அளவுக்கு உங்கள் உடலுக்குள் செல்கிறது என்பதை கவனித்து, முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். எண்ணெய்யில் வறுத்த, இனிப்பும்- உப்பும் அதிகம் சேர்த்த உணவுகளை நீங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியாது. இரவில் அதிகம் தாமதிக்காமல் அரை வயிற்றுக்கு சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறி, சப்பாத்திபோன்றவை போதுமானது. திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும்.

மணப்பெண்கள் அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆரோக்கியம், முறையான உணவு மூலம்தான் கிடைக்கும். ஆரோக்கியமாக இருந்தால்தான் மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.

கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ் (உணவியல்

ஆலோசகர்) சென்னை.
Tags:    

Similar News