செய்திகள்
டெங்கு காய்ச்சல்

4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

Published On 2021-02-21 06:07 GMT   |   Update On 2021-02-21 06:07 GMT
அண்மையில் பெய்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தென்காசி, மதுரை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவது சுகாதாரத்துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் சேர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் இருந்து உற்பத்தியாவதால் குடி தண்ணீரை மூடி வைக்குமாறு ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரை தேக்கி வைக்கும் குடிநீர் தொட்டிகள், டிரம், குடம் ஆகியவற்றையும் மூடி வைக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

டெங்கு கொசுவை ஒழிக்க தென்காசி மாவட்டத்தில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் பெய்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டில் இருக்கக் கூடிய குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் உள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க அவ்வப்போது அதை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

வீட்டில் ஓரமாக கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News