ஆட்டோமொபைல்

பேட்டரி பைக் தயாரிப்பில் யமஹா தீவிரம்

Published On 2018-10-21 10:42 GMT   |   Update On 2018-10-21 10:42 GMT
இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் பேட்டரி பேக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் யமஹா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. #Yamaha #battery



மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான யஹமா, இந்தியாவிற்காக பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள யமஹா மோட்டார் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளுமே மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன போக்குவரத்திற்கு மாறி வருகின்றன.

அதில் குறிப்பாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மத்திய அரசும் ‘பேம்’ எனும் திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிப்பதோடு பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.



இந்தியா மற்றும் ஜப்பான் தவிர பிற நாடுகளில் உள்ள 100 யமஹா நிறுவன பொறியாளர்கள் பேட்டரி வாகன உருவாக்கத்திற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேட்டரி வாகனங்களுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் சிலவற்றை யமஹமா நிறுவனப் பொறியாளர்கள் அடையாளம் கண்டு தங்களுக்குத் தேவையான வகையில் வடிவமைத்துத் தருவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்புதான் யமஹா நிறுவனம் பேட்டரி வாகனம் குறித்து இந்தியர்களிடையே கருத்து கேட்டது. இதன் அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலான பேட்டரி மோட்டார் சைக்கிளை உருவாக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கு என தயாரிக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது. சுற்றுச் சூழலை காக்கும் வகையிலான ‘பேட்டரி பைக்’குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
Tags:    

Similar News