செய்திகள்
கொரோனா நிவாரண நிதிக்கு 2 பவுன் கொடுத்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண் சவுமியா.

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துபெற்ற மேச்சேரி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

Published On 2021-06-14 10:07 GMT   |   Update On 2021-06-14 10:07 GMT
மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் ஆர்.சவுமியா அளித்த கோரிக்கை மனு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை இழுத்தது.
மேச்சேரி:

மேட்டூர் அணையை திறக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பரிசீலித்தபோது சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தை சேர்ந்த ஆர்.சவுமியா என்பவபர் அளித்த மனுவில் என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதியாக கழுத்தில் அணிந்துள்ள 2 பவுன் தங்க சங்கிலியை அளிக்கிறேன் என்று எழுதியிருந்தார். இதனை பார்த்த மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்தார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், மேட்டூர் அணையை திறக்க சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் ஆர்.சவுமியா அளித்த கோரிக்கை மனு கவனத்தை இழுத்தது. பேரிடர் காலத்தில் உதவ முன் வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. விரைவில் அவரது படிப்பிற்கு ஏற்ற உரிய வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. தற்போது மேச்சேரி அருகே பொட்டனேரியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்.

என் மூத்த சகோதரிகள் 2 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை சம்பளம் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவாகி விட்டது. 3 சகோதரிகளும் பட்டதாரிகள். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

எனது தந்தை பணி ஓய்வு பெற்ற சேமிப்புகள் அனைத்தையும் அம்மாவுக்கு மருத்துவச் செலவு செய்து விட்டார். மருத்துவ செலவு சுமார் 13 லட்சம் ஆகிவிட்டது. தற்போது ஏற்பட்ட கொரோனா 2-வது அலையால் பெற்றோரை இழந்து பல குழந்தைகள் தவிக்கின்றனர்.

கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுக்கவேண்டும் என எண்ணினேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. அதனால் என் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை முதல்-அமைச்சரிடம் மனுவுடன் இணைத்து கொடுத்தேன். இதனால் நான் கொடுக்கும் இந்த உதவி பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த 2 பவுன் செயினை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்தேன்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக முதல்-அமைச்சரிடம் சவுமியா மனு கொடுத்தபோது கூட்டமாக இருந்தால் 2 பவுன் செயினை மனுவில் வைத்த விவரத்தை கூறவில்லை. பின்பு வீட்டுக்கு சென்று தந்தையிடம் கூறியுள்ளார். பின்பு இவரது தந்தை பொட்டனேரி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாஸ்கரிடம் கூறினார். அவர் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதிக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக மனு வாங்கும் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மனுவை எடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டபிறகே இந்த விவரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது.

தற்போது மாணவி சவுமியாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.



Tags:    

Similar News