செய்திகள்
விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மதுபாட்டில்

டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை-மதுபிரியர்கள் அதிர்ச்சி

Published On 2020-05-22 14:50 GMT   |   Update On 2020-05-22 14:50 GMT
டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதால் மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் 1½ மாதமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியின் பேரில் கடந்த 16-ந்தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரு டாஸ்மாக் கடையில் காலாவதியான மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த 16-ந்தேதி முதல் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் செல்கின்றனர். நேற்று காலையில் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக மதுபிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர்.

காலை 10 மணிக்கு விற்பனையாளர் மதுபாட்டில்களை விற்பனை செய்ய தொடங்கினார். அப்போது மதுபாட்டில்களின் விவரங்களை பார்த்தபோது, அவை காலாவதியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைபார்த்த மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடன் இதுபற்றி கடை விற்பனையாளர், மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, அரசு வழங்கக்கூடிய மதுபாட்டில்களை தான் நாங்கள் விற்பனை செய்கிறோம், எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மதுபிரியர்கள், விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களிடம் இந்த கடையில் காலாவதியான மதுபாட்டில்களை விற்பனை செய்கிறார்கள். எனவே அதனை வாங்க வேண்டாம் என்று கூறினர். இருப்பினும் சில மது பிரியர்கள் அந்த காலாவதியான மதுபாட்டில்களையும் வாங்கிச்சென்றனர். இதனால் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்கள் காலியானது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News