தொழில்நுட்பம்

ஐபோன்களில் 5ஜி வழங்க ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு

Published On 2019-04-17 07:10 GMT   |   Update On 2019-04-17 07:10 GMT
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple



ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநிறுவனங்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த வகையில், ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க இருநிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. புதிய முடிவில் ஆப்பிள் ஒப்பந்தம் செய்த உற்பத்தியாளர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக குவால்காம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் மற்றும் குவால்காம் இடையேயான இந்த திடீர் முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்திற்கு ஒருமுறை செலுத்தக் கூடிய தொகை ஒன்றை வழங்க இருப்பதாக தெரிகிறது. எனினும், குவால்காம் நிறுவனத்திற்கு ஆப்பிள் எவ்வளவு தொகை வழங்குகிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.



வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலானது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.

இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்துள்ளது. 



2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது. ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு காப்புரிமை கட்டணங்களை செலுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய ஐபோன் மாடல்களில் குவால்காம் சிப்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டது. 

இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவில் ஐபோன் இறக்குமதிக்கு தடை விதிக்க வழக்கு பதிவு செய்தது. தற்சமயம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகியிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஆண்டு ஐபோன்களில் குவால்காமின் 5ஜி மோடெம்களை எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News