செய்திகள்
வேடசந்தூர் அருகே அழகாபுரியில் எந்திரம் மூலம் பொரி தயாரிப்பு பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

வேடசந்தூர் அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2020-10-18 13:36 GMT   |   Update On 2020-10-18 13:36 GMT
ஆயுத பூஜையை முன்னிட்டு வேடசந்தூர் அருகே அழகாபுரி, எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேடசந்தூர்:

வருகிற 25-ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளும் தற்போதே தொடங்கிவிட்டன. அதன்படி, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை வழிபாட்டின்போது, நாளும் நமக்காக உழைக்கும் எந்திரங்களுக்கு சந்தனம், குங்குமப்பொட்டு வைத்து பூஜை செய்வார்கள்.

இந்த பூஜையில் வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட படையலுடன் பொரி முக்கிய பங்கு வகிக்கும். இந்த பொரி தயாரிப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி, எரியோடு கிராமங்கள் பெயர் பெற்றவை. இங்கு தயாராகும் பொரி திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

ஆயுத பூஜை நெருங்கி வருவதை முன்னிட்டு அழகாபுரி, எரியோடு கிராமங்களில் பொரி தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். கடந்த ஒருவாரத்திற்கு முன்பிருந்தே ஆர்டர் எடுத்து பொரி தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அழகாபுரி பொரி உற்பத்தியாளர் சந்திரசேகரன் கூறியதாவது:-

பொரி தயாரிப்புக்கு என்று ஒருசில வழிமுறைகள் உள்ளன. இதற்காக நாங்கள் அரிசி நெல்லை தேர்ந்தெடுத்து பக்குவம் செய்வோம். அதன்படி, கொல்கத்தா, மைசூருவில் இருந்து நெல் வாங்கி வந்து, அதை அரைத்து அரிசியாக மாற்றுவோம். பின்னர் அதை ஒரு வாரம் பக்குவப்படுத்தி, அதன்பிறகு எந்திரத்தில் அரிசியை கொட்டி பொரி வறுக் கப்படுகிறது. உப்பு இல்லாத பொரி மூட்டை ஒன்று ரூ.400-க் கும், உப்பு உள்ள பொரி மூட்டை ஒன்று ரூ.350-க் கும் விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு எந்த விலைக்கு பொரி விற்பனை செய்யப்பட்டதோ, அதே விலைக்கு தான் இந்த ஆண்டும் விற்பனை ஆகிறது. விறகு உள்ளிட்ட எரிபொருள், மின்சார கட்டணம், தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. ஆனால் பொரி விற்பனை விலை மட்டும் மாறவில்லை. இதனால் பொரி உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கொரோனா ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொழிற்சாலைகளில் இருந்து பொரி ஆர்டர்கள் குறைந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News